தான் ஓய்வு பெற வேண்டும் என்று சிலர் விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால், அதில் தோனிக்கு என்று நிச்சயம் சில பக்கங்கள் ஒதுக்கப்படும். அந்த அளவிற்கு தோனியும், அவர் தலைமையிலான அணியும் நிறைய சாதனைகளை செய்துள்ளது. எந்தவொரு சகாப்தமும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் அல்லவா!. அந்த வகையில் தோனியின் சகாப்தம் எப்போது முடியும் என்பது குறித்த விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக பல நேரங்களில் பேட்டிங் பார்ம் காரணமாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் அந்த விமர்சனங்கள் தொடர்கின்றன. எப்பொழுதெல்லாம் அவர் விமர்சிக்கப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை கூடவே முன் வைக்கப்படும். அந்தவகையில் ஆப்கான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் தோனியின் நிதான ஆட்டம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. சச்சின், கங்குலி கூட தோனியின் பேட்டிங் குறித்த தங்களது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்தான், ஓய்வு குறித்து தன்னுடைய மவுனத்தை தோனி கலைத்துள்ளார். ஏபிபி-க்கு தோனி அளித்த பேட்டியில், “நான் எப்பொழுது ஓய்வு பெறுவேன் எனத் தெரியவில்லை. ஆனால், நிறைய பேர் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பே நான் ஓய்வு பெற வேண்டுமென விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார். ஆனால், யார் விரும்புகிறார்கள் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. ஓய்வு குறித்த தோனியின் கருத்து கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி கூறுகையில், “தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என தெரியாது. ஏனெனில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி திடீரென வெளியேறினார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது” என்றார்.