இந்தியா மறுத்ததா? நம்பமாட்டேன்; ஆங்கில மீடியா இந்தியாவையே குறை சொல்லும்: சுனில் கவாஸ்கர்

இந்தியா மறுத்ததா? நம்பமாட்டேன்; ஆங்கில மீடியா இந்தியாவையே குறை சொல்லும்: சுனில் கவாஸ்கர்
இந்தியா மறுத்ததா? நம்பமாட்டேன்; ஆங்கில மீடியா இந்தியாவையே குறை சொல்லும்: சுனில் கவாஸ்கர்
Published on

இந்திய வீரர்கள் 5 வது டெஸ்ட் விளையாட மறுத்ததை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன் எனவும் இந்திய அணியை விமர்சிக்கும் முன் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்தது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரம்பத்தில், மான்செஸ்டரில் தொடரைத் தீர்மானிக்கும் 5 வது டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க இந்திய அணி மறுத்துவிட்டது என்று பலரும் குற்றம் சாட்டினார்கள். ஆனால், இந்திய அணியின் வீரர்கள் தங்கள் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பர்மார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு களத்தில் இறங்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ரவி சாஸ்திரியின் புத்தக வெளியீடுதான் கொரோனா தொற்றுக்கு காரணம் என்று பலரும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், "புத்தக வெளியீட்டு விழாவின் போது இது நடந்தது என்பது யாருக்குத் தெரியும்? ஏனென்றால் புத்தக வெளியீட்டுக்குப் பிறகும், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அவர்கள் எதிர்மறையான முடிவுகளையே பெற்றனர். போட்டியின் முந்திய நாளின்போதும் நடந்த சோதனைகள் அனைத்தும் எதிர்மறை முடிவுகளையே தந்தன. ஆனால், இந்திய வீரர்கள் போட்டியை விளையாட மறுத்துவிட்டார்கள் என்று தெரிவிக்கும் அறிக்கைகள் ஆங்கில செய்தித்தாள்களில் மட்டுமே உள்ளன. அவர்கள் இந்திய அணியைப் பற்றி எதுவும் நல்லதாக சொல்லவோ எழுதவோ மாட்டார்கள்; அவர்கள் எப்போதும் இந்திய வீரர்களையே பொறுப்பேற்கச் செய்வார்கள். தயவுசெய்து உண்மை என்னவென்று கண்டுபிடித்து, பின்னர் விரல்களைக் காட்டுங்கள்" என்று கூறினார்

மேலும், "தொடரை 2-1 என முன்னிலைப்படுத்த எங்கள் வீரர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர். மேலும் மான்செஸ்டரில் அவர்கள் தொடரை விளையாட விரும்பினார்கள். ஏனெனில் அவர்கள் தொடரை 3-1 என வெல்ல முடியும். எனவே இந்திய வீரர்கள் 5 வது டெஸ்ட் விளையாட மறுத்ததை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன். எந்த ஆதாரமும் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளை செய்யக்கூடாது"என்றும் கூறினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் 10 முதல் 14ஆம் தேதிவரை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்த டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் (ECB) இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவிருந்த 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யும் முடிவை எடுத்தது” என தெரிவிக்கப்பட்டது.

மேலும், டெஸ்ட் போட்டியை நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. மேலும் பிசிசிஐ மற்றும் இசிபியும் இணைந்து ரத்து செய்யப்பட்ட போட்டியை மீண்டும் நடத்த முன்வந்துள்ளதாகவும், ஆனால் எப்போது என முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பை பிசிசிஐ எப்போதும் கருத்தில்கொள்வதாகவும், அதில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறது. மேலும் தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு தனது நன்றிகளையும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்திற்கு வருத்தங்களையும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com