கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் டெல்லி அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ்.
அந்த ஆட்டத்தில் 21 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார் ஸ்டொய்னிஸ்.
இந்நிலையில், அதிக பிரெஷர் எடுத்து கொள்ளாமல் டெல்லி அணியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார் ஸ்டொய்னிஸ்.
“இந்த ஆண்டின் பிக் பேஷ் லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் நடப்பு ஐபிஎல் சீசனிலும் என்னால் அதே ஆட்டத்தை தொடர முடியும் என நம்புகிறேன்.
சமயங்களில் அதிக ரன்களை சேர்க்க வேண்டுமென்ற துடிப்பினால் இளம் வீரர்கள் கடுமையான முயற்சிகளை எடுப்பது உண்டு. இந்த ஆண்டு எனது இயல்பான ஆட்டத்தை வெளிக்கொணர விரும்பினேன். அதை ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே செய்துள்ளேன்.
அதனால் நான் ஹீரோவா, வில்லனா என்பது அடுத்தடுத்த ஆட்டங்களில் எனது செயல்பாட்டை பொறுத்து தான் சொல்ல முடியும்.
பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் தலைமையின் கீழ் ஒருங்கிணைந்துள்ள இளமையான வீரர்கள் அதிகம் உள்ள டெல்லி அணி இந்த சீசனில் அற்புதமாக கிரிக்கெட் ஆடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற பிக் பேஷ் லீக்கில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக 705 ரன்களை ஸ்கோர் செய்திருந்தார் ஸ்டாய்னிஸ். வரும் வெள்ளி அன்று சென்னையுடன் டெல்லி மோதவுள்ளது.