இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் படுதோல்வியை தழுவியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், கேப்டன் விராட் கோலியின் இரட்டை சதம் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் விராட் கோலி உட்பட அனைவருமே சொதப்பினர். கீழ்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் அளவுக்கு கூட பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்கவில்லை. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருந்தது. இந்திய அணியில் எல்லோரையும் காட்டிலும் அதிக விமர்சனத்திற்கு ஆளானது ஹர்திக் பாண்ட்யாதான்.
அப்போது ஹர்திக் பாண்ட்யாவை இரண்டு வீரர்கள் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். ‘பாண்ட்யாவை லெஜண்ட் கபில்தேவுடனும் ஒப்பிட வேண்டாம். ஒருநாள் இரவில் கபில்தேவின் இடத்தை பிடித்து விட முடியாது’ என்று ஹர்பஜன் சிங் காட்டமாகக் விமர்சித்தார். அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங்கும் பாண்ட்யாவை விமர்சித்து இருந்தார்.
ஹோல்டிங் கூறுகையில் “ஹர்திக் பண்ட்யாவை ஒரு ஆல்-ரவுண்டராக, பந்து வீச்சில் உதவுவார் என பயன்படுத்துகிறார்கள். ஹர்திக் பண்டியா அதிக ரன் குவிப்பதும் இல்லை, பந்து வீச்சும் பயனற்றதாக உள்ளது, மொத்தத்தில் இந்தியா எதிர்பார்த்த ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக அவர் இல்லை. ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் ஹர்தீக் பாண்டியா, இன்னமும் அந்தப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றத் தொடங்கவில்லை.
ஒரு ஆல் ரவுண்டர் இரண்டு, மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும், பேட்டிங்கிலும் 60, 70 ரன்கள் குவிக்க வேண்டும். அவர்தான் அடுத்த கபில்தேவ் என்றெல்லாம் கூட சொல்வதைக் கேள்விப்பட்டேன். உண்மையில் அவர் அந்தப் பெருமையை அடையத் தகுதியுள்ளவரா என்பதை, அவர் தன் விளையாட்டின் மூலம் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ஹர்திக் பாண்ட்யா முதல் இன்னிங்சில் எடுத்த 5 விக்கெட்கள் முக்கியமான காரணம் ஆகும். அதேபோல், இரண்டாவது இன்னிங்சில் அவர் அரைசதம் விளாசினார். இதன் மூலம் ஒரு ஆல் ரவுண்டராக தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதில் கொடுத்தார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா மீதான தன்னுடைய விமர்சனம் குறித்து ஹோல்டிங் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஹோல்டிங் கூறுகையில், “மற்றவர்கள் தான் பாண்ட்யாவை, கபில் தேவ் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்று கூறினேன். பாண்ட்யாவே அப்படி ஒப்பிட்டார் என்று நான் கூறவில்லை. நான் பேசிய மீண்டும் எடுத்துப் பார்த்தால் அது புரியும். அவரால் அதற்குள் கபில் தேவின் இடத்தை நிரப்பிவிட முடியாது என்றுதான் கூறினேன்.
முதல் போட்டியில் பாண்ட்யா மொத்தமாகவே 10 ஓவர்கள் தான் வீசினார். அதேபோல், இரண்டாவது போட்டியில் அவர் 17 ஓவர்கள் தான் வீசினார். முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் சரியாக ரன் அடிக்கவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் நிறைய ஓவர்கள் வீசினார். முதல் ஓவரின் முதல் பந்திலே விக்கெட் எடுத்ததால் அடுத்த ஓவர்களை கேப்டன் கொடுத்திருப்பார். அதுதான் அதிக விக்கெட்கள் அவர் எடுக்க காரணமாக இருந்திருக்கும்” என்றார்.
பாண்ட்யாவைப் போல் பும்ராவையும் புதிய பந்தில் சிறப்பாக விளையாடாதவர் என்று ஹோல்டிங் விமர்சித்து இருந்தார். ஆனால், மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதுவும் நீண்ட நேரம் நிலைத்து ஆடி இந்திய அணிக்கு சோதனை கொடுத்து வந்த ஸ்டோக்ஸ், பட்லர் ஜோடியை புதிய பந்தின் மூலம் உடைத்தார். அடுத்தடுத்து புதிய பந்தில் விக்கெட்களை அள்ளினார்.
பும்ரா மீதான விமர்சனம் குறித்து ஹோல்டிங் கூறுகையில், “இப்பொழுதும் பும்ராவை ஓப்பனிங் பவுலராக நான் கருதவில்லை. முகமது சமியும், இஷாந்த் சர்மாவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த இருவரை தவிர்த்து புவனேஸ்குமார் ஓப்பனிங் பவுலராக சிறப்பாக வீசுகிறார்” என்றார்.