வங்கதேசத்துக்காக 5, 6 ஆம் நிலை வீரராகக் களமிறங்குவதால் தோனியைப் போலவே விளையாட நினைத்தேன் என்று வங்கதேச கிரிக்கெட் வீரர் மகமதுல்லா தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.
அந்த வகையில் வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மகமதுல்லா, கிரிக்பென்சி இணையதளத்துக்குப் பேசினார் அதில் "நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரும் 5 அல்லது 6 ஆவது இடத்தில்தான் களமிறங்குவார். ஆனால் அவர் ஆட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு செல்லும்விதம் அலாதியானது. நான் எப்போதெல்லாம் தனியாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பேன். அதன் மூலம் நான் ஆட்டத்தின் போக்கை எப்படிக் கொண்டு செல்வது என்பதைக் கற்றுக்கொண்டேன்" என்றார்.
மேலும் தொடர்ந்த மகமதுல்லா "ஒருநாள் போட்டிகளில் 50 சொச்சம் சராசரி வைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. அதேபோல அவரின் ஸ்டிரைக் ரேட் 90-க்கு மேல் இருக்கிறது. இது அவர் ஒரு போட்டியை எப்படி இறுதி வரை தன் கையில் வைத்துள்ளார் என்பதற்கு உதாரணம். எனவே இவையெல்லாம் நான் அவரிடம் கற்றுக்கொள்கிறேன். தோனி, கிரிக்கெட் அரங்கில் பலருக்கும் தூண்டுதலாக இருப்பதற்கு இதுவே காரணம்" எனப் புகழ்ந்துள்ளார்.