நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கிறார் தமிழக வீரர் முரளி விஜய்.
காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், இப்போது அணியில் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி கூறும்போது, ‘காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்தது வருத்தம்தான். இருந்தாலும் அதை பற்றி நினைப்பதை விட்டுவிட்டேன். நினைத்து ஒன்றும் ஆகப்போவதுமில்லை. ஏனென்றால் காயம் ஏற்படுவதும் ஏற்படாததும் என் கையில் இல்லை. இப்போது, தாயின் கர்ப்பத்தில் வெளிவந்திருக்கும் குழந்தை போல உணர்கிறேன். இதற்கு முன்பு ஆடியதை விட சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அணியின் வெற்றிக்கு அதிகமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் என்னை தயார்படுத்துவது அவசியம். மனரீதியாகவும் நான் பலமானவன்தான். இலங்கை டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த முறை தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் நான் ஆடியதை பற்றி கேட்கிறார்கள். அது நடந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. அதை இப்போது பேசுவது சரியல்ல. நான் ஓய்வுபெற்ற பிறகு நினைவுகளாக அதை பற்றி பேச வேண்டும். இப்போது எதிர்வரும் போட்டியையே கவனத்தில் கொண்டிருக்கிறேன்’ என்றார்.