டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் புஜாரா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மறைமுகமாக வாய்ப்பு கேட்டுள்ளார்.
இந்திய அணியில் 72 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அதன் சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதற்கு ஒரு முக்கிய காரணம் அணியின் ஒற்றுமை தான். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டையும் சிறப்பாக இந்தியா வெளிப்படுத்தியது. ஆனால் பேட்டிங்கில் பெரும் பங்கு வகித்தது புஜாரா. கடைசி இரண்டு போட்டிகளிலும் புஜாரா பேட்டிங் தான் வெற்றிக்கு வழிவகுத்தது. இதனால் அவர் கடைசி போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் புஜாரா எப்போது டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒரு வீரராகவே இருக்கிறார். அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டதில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர்குறித்து பேசிய புஜாரா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மறைமுகமாக வாய்ப்பு கேட்டுள்ளார். அவர் பேசும்போது, “சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெல்வது எளிதல்ல. ஒரு பேட்ஸ்மேனாக வேகப்பந்துகள் மற்றும் பவுன்சர்களை எதிர்கொள்ள பழக வேண்டும். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளில் விளையாடியது எனக்கு சிறந்த தனித்துவ ஆட்டமுறையை கற்றுக்கொடுத்தது. நிச்சயமாக தற்போதுள்ள இந்திய அணி, ஒரு சிறந்த அணி. அதில் நானும் ஒருவனாக செயல்பட்டேன். பந்துவீச்சாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
4 பந்துவீச்சாளர்கள் மட்டும் இத்தனை ஓவர்கள் பந்துவீசியது சாதாரணம் அல்ல. 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதும் எளிதல்ல. ஐபிஎல் விளையாடுவதற்கும் முன்பு வரை நான் உள்ளூர் போட்டிகளில் தான் விளையாடினேன். அடுத்த டெஸ்ட் போட்டிகள் தொடர் வருவதற்கு 7 மாதம் உள்ளது. அதற்குள் நான் நன்றாக என்னை தயார் செய்துகொள்வேன். இந்தியாவை தவிர்த்து நான் சிறப்பாக விளையாடியது ஆஸ்திரேலியாவில் தான். நான் வெள்ளை பந்தில் (டி20, ஒருநாள் போட்டிக்கான பந்து) விளையாடுவதற்காக கடுமையாக பணியாற்றுவேன். அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு எப்போதும் முக்கியமானது. அதை நான் என்றும் மறக்கமாட்டேன்” என்று தெரிவித்தார்.