"சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தேன்" - பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டீவ் பக்னர் ஒப்புதல் !

"சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தேன்" - பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டீவ் பக்னர் ஒப்புதல் !
"சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தேன்" - பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டீவ் பக்னர் ஒப்புதல் !
Published on

சச்சின் டெண்டுல்கருக்கு தவறாக அவுட் கொடுத்தது உண்மைதான் என்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் அம்பயர் ஸ்டீவ் பக்னர் பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜேசன் கில்லெஸ்பி பந்தில், பக்னர் சச்சினுக்கு எம்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். ஆனால் அது அவுட் இல்லை என்பது தொலைக்காட்சி ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தது. மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் நடந்த அப்துல் ரசாக் வீசிய பந்து சச்சினின் பேட்டில் பந்து படாமல் சென்றது. ஆனால் பக்னர் தவறாக அவுட் கொடுத்தார். இவையெல்லாம் அன்றைய காலகடத்தில் பெரும் சர்ச்சை ஆனது.

இந்நிலை "மேசன் அண்டு கெஸ்ட் ரேடியோ" நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ள ஸ்டீவ் பக்னர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், அப்போது "சச்சினுக்கு இரண்டு தருணத்தில் நான் தவறாக அவுட் கொடுத்துவிட்டேன். எந்த ஒரு அம்பயரும் தெரிந்தே தவறான முடிவு வழங்க விரும்புவதில்லை. ஆனால் மனிதர்கள் தவறு செய்வது சகஜம். ஒரு முறை ஆஸ்திரேலியாவில் பந்து விக்கெட்டுக்கு மேலே சென்றது. இரண்டாவது முறை ஈடன் கார்டனில். பந்து சச்சினின் பேட்டில் படவில்லை" என்றார்.

மேலும் தொடர்ந்த பக்னர்" கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது உங்களுக்கு ஒன்றுமே கேட்காது. ஏன் என்றால் 1 லட்சம் ரசிகர்கள் கோஷமிடுவார்கள். தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதுமே மனித வாழ்வின் ஒரு பகுதிதான். இது அம்பயரின் தன்னம்பிக்கைக்குப் பாதகமாக இருக்குமா எனச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அம்பயரின் திறனை மேம்படுத்தும்" என்றார்.

இப்போதைய தொழில்நுட்பம் குறித்துப் பேசிய பக்னர் "அம்பயர்களின் நிலை இப்போது வெகுவாக மாறிவிட்டது. ஏன் என்றால் ஒருகாலத்தில் பேட்ஸ்மேன் லைனுக்கு வெளியே விளையாடும் போது அவர் அவுட் இல்லை எனத் தெரிவித்து வந்தோம். ஆனால் தற்போதைய தொழில்நுட்பம் பந்து விக்கெட்டில் (ஸ்டெம்பில்) படும் எனத் தெரிவிக்கும் போது முடிவை மாற்றி அவுட் வழங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தொழில் நுட்பத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com