உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் முறை பிடிக்காத காரணத்தாலே உலக சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகியுள்ளார் என கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வரும் செஸ் கிட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ஒரு வாரத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு ,3 மாதத்தில் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகளை அரசு சிறப்பாக செய்துள்ளது. சென்னையில் ஒலிம்பியாட் தொடருக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது. ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்துள்ள என்னுடைய நண்பர்கள் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தொடர் முழுவதும் அணிகள் சிறப்பாக விளையாட வேண்டும். ஒரு போட்டியில் நமக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோகலாம். வழக்கத்தைவிட அதிக ஊடக வெளிச்சம் விழுவதை பார்த்து பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளோம். அணி வீரர்களிடம் பதக்கங்கள் குறித்து யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். 10 போட்டிகளுக்கு பிறகு ஊடக வெளிச்சம் குறித்து யோசிக்கலாம் என தெரிவித்துள்ளேன். பதக்கம் வென்ற பின் கொண்டாடுவோம் என கூறியுள்ளேன். எப்போதும் தமிழ்நாட்டை சார்ந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என தெரிவித்தார்.
மேக்னஸ் கார்ல்சன் உலக சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலக காரணம் அந்த தொடர் நடைபெறும் முறை பிடிக்காததால் மட்டுமே! ஒரு தொடரை வென்று விட்டு ஒரு வருடம் மட்டும்தான் இடைவெளி கிடைக்கும். அடுத்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க விளையாட வேண்டி இருக்கும். எனக்கும் அந்த முறை பிடிக்கவில்லை. அந்த சாம்பியன்ஷிப் வெற்றி பெறுவதற்கு முன்பு போதும் என தோன்றும். ஆனால் நான் விலகவில்லை. விலகுவற்கு ஒரு தனி தைரியம் தேவை. மேக்னஸ் விலகியுள்ளார்” என தெரிவித்தார்.