இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தனக்கான இடம் குறித்து தினேஷ் கார்த்திக் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியில் தோனிக்கு முன்னதாகவே இடம்பிடித்தவர் தினேஷ் கார்த்திக். இரண்டு மாத இடைவெளிதான் இருவருக்கும். ஆனால், தோனி அடுத்தடுத்த உச்சங்களை எட்டிய அந்த நேரத்தில் தினேஷ் தன்னுடைய இருப்பை தக்க வைக்க போராடிக் கொண்டிருந்தார். 2014ம் ஆண்டு வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகதான் அவர் முதலில் களமிறங்கினார். மொத்தமாகவே இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில்தான் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். இதில் 37 இன்னிங்சில் விளையாடி 1000 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 7 அரைசதங்களும், ஒரு சதமும் இதில் அடங்கும்.
2010 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டிதான் அவர் கடைசியாக விளையாடிய டெஸ்ட். 2010ம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. தொடர்ச்சியாக இந்திய அணி விளையாடிய 87 போட்டிகளில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை கூட இதுவரை அவர் 79 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
நீண்ட காலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும், ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல், இலங்கை அணியில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி தினேஷ் கார்த்திக் எல்லோரையும் மிரட்டினார். சமீபகாலமாகவே தினேஷ் கார்த்திக் தன்னை ஒரு திறமைமிக்க பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் நிரூபித்து வருகிறார்கள்.
டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சாஹாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து தினேஷ் தனது அனுபவங்களை விரிவாக செய்தியாளர்களை பகிர்ந்து கொண்டார்.
தினேஷ் கூறுகையில், “நான் அப்பொழுது நல்ல பார்மில் இல்லை. தொடர்ச்சியாக என்னுடைய திறமையை வெளிப்படுத்தவில்லை. அது மிகவும் போட்டி நிறைந்த சூழலாக இருந்தது. தோனி போன்ற வீரர் அப்போது களத்தில் இருந்தார். அந்த நேரத்தில் உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவர் மாறினார். அதற்கு முன்பாக இந்திய அணி தோனி போல் ஒரு கேப்டனை பார்த்ததில்லை.
சில சாதாரண வீரர்களைப் போல் என்னுடைய இடத்தை நான் இன்னும் இழக்கவில்லை. அந்த நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை நான் நேர்மையாக ஒப்புக் கொள்ளவேண்டும். எனக்கு தற்போது மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய முழுத் திறமையை இதில் வெளிப்படுத்துவேன்.
ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கவே முயற்சித்து வருகிறேன். என்னால் அப்படி இருக்க முடியும். சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் சிறந்த வீரரராகவே இருப்பேன். எந்த நிலையிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் என்னுடைய திறமையை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவேன். அந்த வகையில் ரஞ்சி டிராபி விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கு உங்களை நிறைய பேர் கவனிப்பார்கள். தமிழ்நாடு அணியில் விளையாடுவதும் எனக்கு பிடிக்கும்” என்றார்.
தோனி தன்னுடைய காலத்தில் சிறந்த பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்துள்ளார். தற்போது அனுபவம் மிக்க வீரராக உள்ள தினேஷ் கார்த்திக்கும் அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.