சீனாவின் நான்ஜிங் நகரில் 24–வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து மற்றும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ஆகியோர் மோதினர். கரோலினா மரின் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கரோலினா மரின் முதல் வீராங்கனையாக மூன்றாவது முறை உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பட்டம் வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் பிவி சிந்து. இன்றைய போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிவி சிந்து.
இருப்பினும், பிவி சிந்து தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு விட்டார் என்று விமர்சனர்கள் எழுந்தது. சமூக வலைத்தளங்களிலும் பிவி.சிந்துவின் தோல்வி குறித்து அதிகம் பேசப்பட்டது. பிவி.சிந்துவின் தோல்வி குறித்து ஊடகங்களிலும் செய்திகள் அதிகம் வெளியானது.
இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பதிலடி கொடுத்துள்ளார். ‘நான் தங்கத்தை இழக்கவில்லை, வெள்ளியை வென்றுள்ளேன்’ என்று பிவி சிந்து கூறியுள்ளார். மேலும், தோல்வி அடைந்த போதும் உலகம் முழுவதும் தனது ஆதரவும், அன்பும் அதிக அளவில் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.