ராகுல் மீதான தனிப்பட்ட வெறுப்பு என்பது எதுவும் இல்லை, ஆனால் அவர் சரியாக விளையாடாதபோதும் தொடர்ந்து வாய்ப்பளிப்பது என்பது, நீதியின் மீதான நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமாக இருந்து வரும் கேஎல் ராகுல், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். இந்திய அணி நிர்வாகமும் கே.எல்.ராகுலின் முந்தைய சிறப்பான பங்களிப்பை மனதில் வைத்து, தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. ஆனாலும், மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கும் போதும், அவரால் தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டு எடுத்துவர முடியாமலே இருந்துவருகிறது.
சிறப்பான ஃபார்மில் இருந்த கே.எல்.ராகுலால் ஏன் ரன்குவிக்க முடியவில்லை? என்ன நடந்தது?
வயிற்று பகுதியில் ஏற்பட்ட தீராத வலியின் காரணமாக கேஎல் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற அவருக்கு அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வயிற்று பகுதி மற்றும் இடுப்பு பகுதியை பாதிக்கும் இடத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக, தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலேயே அவரது சிகிச்சை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்ட ராகுல், மீண்டும் ஐபிஎல் போட்டியின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
2021ஆம் ஆண்டு தனது வாழ்நாள் ஃபார்மில் இருந்த கே.எல்.ராகுலிற்கு அதற்கடுத்த 2 வருடங்கள் தலைகீழாக மாறும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக அந்தந்த நாடுகளின் சொந்த மைதானங்களில் அடுத்தடுத்த டெஸ்ட் சதங்களை அடித்திருந்தார் ராகுல். ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்துக்கு எதிராக சதத்தை பதிவு செய்திருந்தார். மேலும் ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் மட்டும் விளையாடி 626 ரன்களை குவித்திருந்தார். 2021 ஐபிஎல் தொடரில் வயிற்று காரணமாக பாதியிலேயே வெளியேறியவர் தான், தற்போது வரை அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகான எனது பேட்டிங் சிறப்பானதாக இல்லை - கே.எல்.ராகுல்
அறுவை சிகிச்சைக்கு பின்னர் பேசியிருந்த கே.எல்.ராகுல், ” ஒவ்வொரு வீரருக்கும் மிகப்பெரிய சர்ஜரியிலிருந்து மீண்டுவந்து விளையாடி தன்னுடைய பார்மை எடுத்துவருவது நிச்சயம் கடினமானதாக தான் இருக்கும். ஆம் என்னுடைய பேட்டிங்கும் கடந்த வருடங்களில் சிறப்பானதாக இல்லை” என பேசியிருந்தார்.
இந்நிலையில் நிறைய வாய்ப்புகளை வழங்கிய பிறகும் சிறப்பாக விளையாடாமல் கே.எல்.ராகுல் சொதப்பி வருவதால், ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல முன்னாள் வீரர்களும் விமர்சனங்களை கடுமையாக பதிவுசெய்துவருகின்றனர்.
கடந்த 20 வருடங்களில் எந்த வீரருக்கும் இத்தனை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை!- வெங்கடேஷ் பிரசாத்
இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத், ”கே.எல்.ராகுலின் மோசமான ஆட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக செயல்படவில்லை. கடந்த 20 வருடங்களில், இவ்வளவு மோசமான சராசரியுடன் இருக்கும் ஒரு வீரருக்கு இத்தனை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இவரை விட அதிக சராசரியுடன் 40+ல் ஷிகர் தவான், 41+ல் மயாங்க் அகர்வால், அதிக ரன்களுடன் சர்பராஸ் கான் மற்றும் அபாரமான பேட்டிங் பார்மில் சுப்மன் கில் முதலிய வீரர்கள் வெளியில் இருக்கின்றனர். இவருடைய இடத்திற்காக தொடர்ந்து அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து கொடுக்கப்படும் வாய்ப்பு நீதியின் நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது!
தொடர்ந்து டிவிட்டரில் பேசியிருந்த வெங்கடேஷ் பிரசாத், ”சரியாக விளையாடாத போதும் கே.எல்.ராகுலை அணிக்குள் சேர்த்துக்கொள்வது, நீதியின் மீதான நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது. முன்னாள் இந்திய வீரர்களில் எஸ்.எஸ்.தாஸ் சிறப்பான பேட்டிங் திறனை கொண்டிருந்தார், சடகோபன் ரமேஷ் 38+ சராசரியுடன் இருந்தும் அவர்களுக்கு 23 போட்டிகளில் தான் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 47 போட்டிகளில் விளையாடி இருக்கும் கே.எல்.ராகுல் 27க்கும் குறைவான சராசரியை தான் வைத்திருக்கிறார்” என குற்றஞ்சாட்டினார்.
நான் அவருக்கு எதிரி இல்லை, அவர் இப்படி விளையாட கூடாது, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி அவரது பார்மை மீட்க வேண்டும்!
மேலும் பேசியிருக்கும் வெங்கடேஷ் பிரசாத், “சிலர் எனக்கு கே.எல்.ராகுல் மேல் தனிப்பட்ட வெறுப்பு இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், அப்படி இல்லை, அவர் இப்படி விளையாட கூடாது. புஜாராவை போன்று இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலோ இல்லை இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலோ பங்குபெற்று அவருடைய பார்மை மீட்க வேண்டும். மீண்டும் அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
துணைகேப்டனாக இருப்பதால் டிராப் செய்ய கூடாது என்ற எந்த விதியும் இல்லை - கபில்தேவ்
இந்தியாவின் டாப் ஆர்டர்கள் சோபிக்காதது குறித்து விமர்சித்திருந்த கபில்தேவ், “ ஏன் ராகுலை அணியில் இருந்து நீக்க முடியாது? துணை கேப்டனாக இருப்பவர்களை நீக்க முடியாது என்ற எந்த விதிமுறையும் இல்லை. அணிக்கு என்ன காம்பினேஷன் தேவையோ, அதுதான் முதலில் முக்கியம்” என்று கூறியிருந்தார்.