ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் சாமர்த்தியமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் பேட்டிங்கில் அதிக ரன்களை குவித்தால், பெரும் இலக்கை எதிர்கொள்வதில் அழுத்தம் ஏற்பட்டு எதிரணி தோல்வியை தழுவும் என அவர் கணித்திருந்தார். அவரது கணிப்பு சரியாக இருந்தது.
அவர் நினைத்தது போலவே முதல் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பேரிஸ்டோவ் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தினர். பஞ்சாப் அணியின் பவுலர்கள் வீசிய பந்தை இருவரும் நான்காபுறமும் சிதறடித்தனர். அவர்களின் பார்ட்னர்ஷிப்பால் ஹைதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை குவித்தது. பொறுப்பான அரை சதம் அடித்த கேப்டன் வார்னர் 40 பந்துகளில் 52 ரன்களை எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். இதில் 5 பவுண்டர்கள் மற்றும் ஒரு சிக்ஸர் அடக்கம். அதே ஓவரில் 97 (55) ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்த பேரிஸ்டோவ் சதத்தை தவறவிட்டார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் 10 பந்துகளை சந்தித்த கேன் வில்லியம்சன் தனது பங்கிற்கு 20 ரன்களை அடித்துவிட்டு சென்றார்.
ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் பெரும் பலமாக ஓப்பனிங் இருந்தது. இருவரும் 160 ரன்கள் வரை அவுட் ஆகாமல் அடித்தது பஞ்சாப் அணியை நிலைகுலைய வைத்தது. பேரிஸ்டோவின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்கை வகித்தது. 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை அவர் விளாசியது ஹைதராபாத்தின் ரன்களை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியிருந்தது.
பஞ்சாப் அணியின் பவுலர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றமால் விட்டது சொதப்பலாக மாறியது. தொடக்கத்திலேயே பேரிஸ்டோவின் கேட்சை தவறவிட்டதும் திருத்தமுடியாத பிழையானது. ஹைதராபாத் அணி 230 ரன்களை அடிக்கும் என்ற போக்கில் ரவி பிஷ்னாய் வீசிய 16வது ஓவர் பெரும் திருப்பமாக அமைந்தது. அந்த ஓவரில் வார்னர் மற்றும் பேரிஸ்டோவ் இருவரும் ஆட்டமிழந்தது, ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. 3 ஓவர்களை வீசியிருந்த பிஷ்னாய் 29 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களுக்கு 33 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
202 ரன்கள் என்ற மிக சவாலான இலக்கை எதிர்த்து ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் நிலைத்து ஆடாதது சறுக்கலாக அமைந்தது. நல்ல இன்னிங்ஸை கொடுப்பார் என எதிர்பார்த்தபோது மயங்க் அகர்வாலை கே.எல்.ராகுல் ரன் அவுட்டாக்கியது பிழையாக மாறியது. நிலைத்து அடிக்க வேண்டிய நேரத்தில் சிம்ரன் சிங் என்ற அனுபவமில்லாத வீரரை இறக்கி விக்கெட்டை பறிகொடுத்ததால் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. அதேசமயம் கேப்டன் ராகுலுடன் ஜோடி சேர்ந்த பூரன், அதிரடியை வெளிப்படுத்தி ஹைதராபாத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். 17 பந்துகளில் அரை சதம் அடித்த பூரனால் ஹைதராபாத் பவுலர்களுக்கு பதட்டமே வந்தது. ஆனால் அவருடன் நிலைத்து ஆடமால் 11 (16) ரன்களில் ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தது சொதப்பலாக அமைந்தது.
நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் நின்று வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த பூரன் 77 (37) ரன்களில் ஆட்டமிழந்ததும் பஞ்சாப் அணியின் தோல்வி உறுதியானது. அவர் போன பின்னர் களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழக்க, பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதனால் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் ரஷீத் கானின் சுழல் பெரும் புயலைக் கிளப்பியது. 4 ஓவர்களுக்கு 12 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த அவர், 3 விக்கெட்டுகளை சாய்த்து பஞ்சாப் அணியை பதறச் செய்தார். அத்துடன் கலீல் அகமது மற்றும் நடராஜன் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஹைதராபாத் அணியினர் கேட்ச்களை தவறவிடாமல் பிடித்தது பவுலர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. மொத்தத்தில் வார்னர் கேப்டன்ஷிப்பில் வாகை சூடியது ஹைதராபாத்.