கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேரிஸ்டோவ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 15 ஓவர்களுக்கு 160 ரன்கள் குவித்தது அவர்களின் பார்ட்னர்ஷிப்.
அரை சதம் கடந்த வார்னர் 52 (40) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதே ஒவரில் 97 (55) ரன்கள் எடுக்க நிலையில் விக்கெட்டை இழந்த பேரிஸ்டோவ் சதத்தை தவறவிட்டார். ப்பின்னர் இதற்கிடையே மணிஷ் பாண்டே வந்த வேகத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த வில்லியம் மற்றும் அபிஷேக் ஷர்மா தங்கள் பங்கிற்கு சற்று அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 201 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் சிங் 33 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 202 ரன்கள் என்ற மிகப்பெரும் இலக்கை எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 4வது இடத்தில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் மட்டும் 17 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 37 பந்துகளில் 77 ரன்கள் குவித்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.
16.5 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி 132 ரன்களுக்கு சுருண்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய ரஷீத் கான் 4 ஓவர்களுக்கு 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.