ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் ஐதராபாத் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. கடைசி பந்தில் பெங்களூரு அணி வெற்றியை கோட்டை விட்டது.
ஐபிஎல் தொடரில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் 44 ரன் எடுத்த நிலையில் கேப்டன் வில்லியம்சன் 31 ரன் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்ஷல் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், 142 ரன் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய பெங்களூருவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் கோலி 5 ரன்னில் வெளியேறினார். எனினும் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 41 ரன்னும் மேக்ஸ்வெல் 40 ரன்னும் எடுத்து தங்கள் அணியை வெற்றிக்கு மிக அருகே அழைத்துச் சென்றனர்.
கடைசி ஓவரில் 13 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டிவில்லியர்ஸ் அந்த ஓவரை எதிர்கொண்டார். ஆனால், புவனேஸ்வர் குமார் இறுதி ஓவரை மிகவும் நேர்த்தியாக வீசி வெற்றியை மீட்டெடுத்தார். 4 ரன் வித்தியாசத்தில் வென்ற ஐதராபாத் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.