ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இந்திய அணியின் இறுதி சுற்று வாய்ப்பு கேள்விக்குறி ஆனது. ஆர்சிபி கால்குலேட்டரை வைத்து இந்திய அணி கணக்கீடுகளை மேற்கொண்டிருந்த வேளையில், நேற்று ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வென்றதன் மூலம் இந்திய அணியின் இறுதி சுற்று வாய்ப்பு ஒட்டுமொத்தமாக நிறைவடைந்தது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஏற்கனவே இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து விட்டதால், இன்றைய இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத சம்பிரதாய மோதலாக மாறிவிட்டது. ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்ப இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விரும்பும் இப்போட்டியில் இந்திய கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட உள்ளார். டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் முகமது நபி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் ஓப்பனர்களாக ராகுல், கோலி இருவரும் களமிறங்கினர். துவக்கத்தில் இருவரும் மெதுவாக ஆட்டத்தை துவங்கிய நிலையில், ஃபருக்கி வீசிய ஓவரிகளில் பவுண்டரிகளை விளாசி இருவரும் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். ஆப்கன் பவுலர்களை இந்த இருவர் கூட்டணி பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி சிதறடித்தது.
இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ராகுல் 62 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, அடுத்து சூர்யகுமார் யாதவுடன் கைகோர்த்தார் கோலி. ஆனால் சூர்யா ஒரு சிக்ஸரை மட்டும் விளாசிவிட்டு அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து இணைசேர்ந்த கோலியும் ரிஷப் பண்டும் ஆப்கன் பவுலர்களை பந்தாடினர்.
பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரசிகர்களை சீட்டின் விளிம்புக்கு வரச் செய்தார் கோலி. சிக்ஸர் ஒன்றை எல்லைக்கோட்டுக்கு வெளியே விளாசி 1021 நாள் தவத்தை நிறைவு செய்தார். 71வது சதத்தை எட்டி சாதனை படைத்தார் கோலி. டி20 கிரிக்கெட்டில் இது அவருக்கு முதல் சதம் ஆகும். சதத்தை அடைந்த பின் இன்னும் உத்வேகத்துடன் ஆடிய கோலி, ஃபருக்கி வீசிய 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசி அமர்க்களப்படுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது இந்திய அணி.