நடப்பு சீசனில் தோனி 123.40 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 232 ரன்களை குவித்துள்ளார். இது 2020, 2021 சீசனை விட சிறந்த பெர்ஃபாமன்ஸ் ஆகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2022 சீசன் “மறக்க வேண்டிய சீசனாக” அமைந்து விட்டது. நான்கு முறை சாம்பியனான சென்னை அணி 10 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்ற சென்னை அணி தனது கடைசி போட்டியிலும் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை பரிசளித்துவிட்டு விடைபெற்றது.
அவர்களுக்கான நேற்றைய தினத்தின் ஒரே ஆறுதல் “அடுத்த சீசனிலும் சென்னைக்காக விளையாடுவேன்” என்ற தோனியின் சொற்கள்தான். இந்நிலையில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்கலாம். 14 போட்டிகளில் விளையாடிய தோனி ஒரு அரைசதம் உட்பட 232 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் தோனியின் மூன்றாவது குறைவான ஸ்கோர் இது. இது 2020 மற்றும் 2021 சீசன்களை விட அதிக ரன்கள் ஆனால் அதற்கு முந்தைய அனைத்து சீசன்களை விடக் குறைவான ரன்கள் ஆகும்.
அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 50 ரன்களை குவித்து இருந்தார் தோனி. இதுவும் 2020 மற்றும் 2021 சீசன்களை விட அதிக ரன் ஆகும். ஆனால் அதற்கு முந்தைய அனைத்து சீசன்களை விடக் குறைவான ரன்ஆகும். சீசனில் அவரது ஸ்டிரைக் ரேட் 123.40 ஆகும். இதற்கு முன்பும் 2015, 2017, 2020, 2021 சீசன்களில் இதைவிட குறைவான ஸ்டிரைக் ரேட்டில் தோனி ஆடியுள்ளார்.
அவரது சராசரி 39.20 ஆகும். இதற்கு முன்பும் 2010, 2015, 2017, 2020, 2021 சீசன்களில் இதைவிட குறைவான சராசரியுடன் தோனி ஆடியுள்ளார். இந்த சீசனில் தோனி செய்த மொத்த ஸ்டம்பிங்ஸ் எண்ணிக்கை பூஜ்ஜியம். 2008, 2021 ஆகிய இரு சீசன்களுக்கு பிறகு இந்த சீசனில் தான் தோனியில் மின்னல் வேக ஸ்டம்பிங் நிகழாமல் போயிருக்கிறது. எனவே தோனியின் பெர்ஃபாமன்ஸ் குறித்து ஒரு வரியில் சொன்னால், 2020, 2021 சீசனை விட சிறப்பாகவும் முந்தைய சீசன்களை விட சுமாராவும் விளையாடி உள்ளார்.
தோனியின் நிதான ஆட்டத்தால் சில ஆட்டங்களில் சிஎஸ்ஏவின் வெற்றிகளில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டது என்பது உண்மைதான். ஒட்டுமொத்தமாக மற்ற வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிக அளவில் இருப்பதால் தோனியின் மீதான விமர்சனங்கள் மங்கியுள்ளது.