மொத்தமாக வென்ற இந்தியா; கடும் போட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ்; ஒருநாள் தொடர் முழு ரிப்போர்ட்!

மொத்தமாக வென்ற இந்தியா; கடும் போட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ்; ஒருநாள் தொடர் முழு ரிப்போர்ட்!
மொத்தமாக வென்ற இந்தியா; கடும் போட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ்; ஒருநாள் தொடர் முழு ரிப்போர்ட்!
Published on

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடர் நடந்து முடிந்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 3-0 என தொடரை முழுமையாக வென்றிருக்கிறது. எப்படி இந்த வெற்றி சாத்தியப்பட்டது?

டி20 உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர்-நவம்பரில் நடக்கவிருப்பதால் இந்த ஆண்டு முழுவதுமே டி20 போட்டிகள்தான் அதிகமாக ஆடப்பட்டு வருகிறது. இடையில் ஒருநாள் போட்டிகள் என ஒரு ஃபார்மட் இருப்பது மறந்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே இடையிடையே ஒரு சில போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையிலேயே இந்த வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரும் சேரும்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ராகுல் போன்ற பெரிய தலைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தவாண் தலைமையில் ஒரு இரண்டாம் கட்ட அணியையே இந்தியா வெஸ்ட் இண்டீஸிற்கு அனுப்பியிருந்தது. ஆயினும், இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இந்த மூன்று போட்டிகளில் 2 போட்டிகள் இறுதி ஓவர் வரை பயங்கர திரில்லாக சென்றிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டி20 இல் மட்டும்தான் சிறப்பாக ஆடுவார்கள். அதில் மட்டும்தான் கடைசி வரை போராடி எதிரணியை மிரளச் செய்வார்கள் போன்ற வாதமெல்லாம் இந்தத் தொடரில் உடைபட்டு போயிருந்தது. மேயர்ஸ், ப்ரூக்ஸ், பூரன் ஆகியோர் அந்த அணிக்காக சிறப்பாகவே பேட்டிங் ஆடியிருந்தனர். அணி இக்கட்டான சூழலில் இருந்த போது அதிலிருந்து மீட்டு கடும் போட்டியளிக்க வைத்தனர்.

வெஸ்ட் இண்டீஸின் சவாலஒ எதிர்கொள்ளும் வகையிலேயே இந்திய அணியின் பெர்ஃபார்மென்ஸூம் அமைந்திருந்தது. கேப்டன் தவாண் + சுப்மன் கில் கூட்டணி இந்தத் தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. முதல் போட்டியில் இருவரும் இணைந்து 119 ரன்களையும் மூன்றாவது போட்டியில் இருவரும் இணைந்து 113 ரன்களையும் எடுத்திருந்தனர். நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் சுப்மன் கில் 98 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டநாயகன் விருதும் அவருக்குதான் வழங்கப்பட்டது. தொடர்நாயகன் விருதும் அவருக்குதான் வழங்கப்பட்டது. நம்பர் 3 இல் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயருமே சீரான பெர்ஃபார்மென்ஸையே கொடுத்திருந்தார். சூர்யகுமார் யாதவ், சாம்சன், அக்சர் படேல், தீபக் ஹூடா ம் ஆகியோரும் தேவையான சமயத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடியிருந்தனர்.

ஒவ்வொரு முறை வாய்ப்புகளை பெறும்போதும் வாய்ப்புகளின் மதிப்பை அறியாமல் அவற்றை விரயம் செய்த சாம்சன் இந்த முறை ஒரு நல்ல இன்னிங்ஸை இரண்டாவது போட்டியில் ஆடியிருந்தார். தனது முதல் சர்வதேச அரைசதத்தையும் கடந்திருந்தார். அந்தப் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகியிருந்தார். அது மட்டும் நிகழாமலிருந்திருந்தால் சாம்சம் இன்னும் அழுத்தம் திருத்தமான இன்னிங்ஸை ஆடியிருக்க முடியும். ஆல்ரவுண்டரான அக்சர் படேல் தொடர்ச்சியாக பந்து வீசினாலும் அவர் பெரிதாக பேட்டிங்கில் தடம்பதித்ததில்லை. அதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிட்டியதில்லை. இந்தத் தொடரில் அந்த ஏக்கமும் அவருக்கு தீர்ந்திருந்தது. இரண்டாவது போட்டியில் 300+ சேஸிங்கின் போது கடைசி வரை நின்று மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடியிருந்தார்.

முதல் இரண்டு போட்டிகளிலுமே பெரிய ஸ்கோர் எட்டப்பட்டிருந்தது. இரண்டு அணிகளிலுமே சில பௌலர்கள் கொஞ்சம் அதிகமாகவே ரன்களை கொடுத்திருந்தனர். அகேல் ஹூசைன், மோட்டி, சஹால், அக்சர் படேல், சிராஜ் போன்றோர்கள் கொஞ்சம் சிக்கனமாகவே வீசியிருந்தனர். ஷர்துல் தாகூர் இந்தத் தொடரிலும் தனது வழக்கமான பணியை தொடர்ந்திருந்தார். எதிரணி கொஞ்சம் நிலைப்பெற்று பலம் பெறுவது போல் தோன்றும் சமயத்தில் சரியாக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை காப்பாற்றியிருந்தார். இரண்டாவது போட்டியில் பூரனும் ஹோப்பும் 117 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். அந்த சமயத்தில் 74 ரன்களிலிருந்த பூரனின் விக்கெட்டை ஷர்துல் தாகூர் வீழ்த்தியிருப்பார். பூரன் நின்றிருந்தால் வெஸ்ட் இண்டீஸின்ன் ஸ்கோர் எதிர்பார்ப்பை மீறி எகிறியிருக்கும். முதல் போட்டியிலுமே ப்ரூக்ஸூம் மேயரும் 117 ரன்களுக்கு கூட்டணி அமைத்திருப்பர். இருவரின் விக்கெட்டையும் ஒரே ஸ்பெல்லில் வீழ்த்தி இந்தக் கூட்டணியையும் ஷர்துல் முழுமையாக உடைத்து விட்டிருந்தார்.

பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலுமே சில சில இடங்களில் குறைகள் இருந்தாலும் அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதை இந்திய வீரர்கள் சரியாக செய்திருந்தனர். தோல்வியே இல்லாமல் இந்தத் தொடரை முழுமையாக வென்றதே இந்திய அணி மெச்சத்தகுந்த பெர்ஃபார்மென்ஸூக்கு கிடைத்த பரிசுதான்.

முதல் இரண்டு போட்டிகளிலேயே இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. ஆயினும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியிருக்கலாம். அதிலும் குறிப்பாக ருத்ராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங் இருவரும் இந்திய அணியின் வருங்கால திட்டங்களில் இருக்கக்கூடிய வீரர்கள். இவர்களை பென்ச்சிலேயே வைத்தது இந்தத் தொடரின் நெருடலான அம்சமாக இருந்தது. மூன்றாவது போட்டியில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். கடந்த ஜூனில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலுமே ஒரு முறை கூட ப்ளேயிங் லெவன் மாற்றப்படவில்லை. பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இதை ஒரு புதிய பாணியாக அணியின் பயிற்சியாளர் டிராவிட் கையிலெடுத்திருக்கிறார். இதற்கான பலன் என்ன என்பது நீண்ட கால அடிப்படையிலேயே தெரிய வரும்.

- ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com