ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு டி20 தொடரில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகுறிய சம்பவங்கள், நடந்துவரும் நிலையில் தற்போதும் ஒரு சர்ச்சைக்குறிய விசயம் அரங்கேறி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 லீக்கான பிக்பேஸ் லீக் (பிபிஎல்) கிரிக்கெட் தொடரின் 2022-2023 சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தொடர் தொடங்கிய முதலே பல்வேறு சர்ச்சைக்குறிய சம்பவங்களை சந்தித்து வருகிறது. மேலும் அந்த சம்பவங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கேள்விகளையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது மறுக்கமுடியாதது.
15 ரன்களில் ஆல் அவுட்டான சிட்னி தண்டர்ஸ்!
தொடரின் தொடக்கத்துலேயே ஒரு ஆச்சரியத்திற்குரிய போட்டியை சந்தித்திருந்தது பிபிஎல். தொடரின் 5ஆவது போட்டியில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதிய போது, 140 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி தண்டர்ஸ் அணி 15 ரன்களிலேயே ஆல்அவுட்டாகி ஒரு விவாதத்திற்குரிய மறக்க முடியாத போட்டியாக மாறியது. அந்த போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியை சேர்ந்த 5 வீரர்கள் டக் அவுட் ஆகியிருந்தனர். 3 வீரர்கள் ஒரு ரன்னும், ஒருவர் 2 ரன்னும், மற்றொருவர் 3 ரன்களும் எடுத்திருந்தனர்.
சிக்சர் லைனிற்கு வெளியே பிடிக்கப்பட்ட பந்து அவுட்டென அறிவிக்கப்பட்டது!
மற்றொரு பிபிஎல் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், போட்டியின் முக்கியமான நேரத்தில் பிடிக்கப்பட்ட கேட்ச் சர்ச்சைகுரியதாக மாறியது. 225 ரன்களை இலக்காக துரத்திய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஜோர்டான் சில்க் இறுதிவரை களத்தில் நின்று வெற்றிக்கான அந்த பக்கமா இந்த பக்கமா என்ற கோட்டில் வைத்திருந்தார் போட்டியை. அப்போது 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய ஜோர்டன், இரண்டாவது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். பந்தும் கிட்டத்தட்ட எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று விட்டது. எல்லைக் கோட்டில் நின்று கொண்டிருந்த நெஸர் அங்கே ஒரு மேஜிக்கை நிகழ்த்தினார்.
OUT or NOT OUT? pic.twitter.com/evxLhL2hAv
— England's Barmy Army (@TheBarmyArmy) January 1, 2023
எல்லைக்கோட்டில் பறந்து வந்த பந்தை பிடித்த அவர் பேலன்ஸ் இல்லாமல் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்றுவிட்டார். ஆனால், பந்தினை மேலே தூக்கி வீசி காற்றிலேயே வைத்திருந்த அவர், எல்லைக்கோட்டிற்கு வெளியே இருந்து பந்தை தரையில் கால் படாமல், அந்தரத்தில் தாவிபிடித்து மீண்டும் பந்தினை கோட்டிற்கு உள்ளே வீசி, மைதானத்திற்குள் ஓடி வந்து லாவகமாக பிடித்து அவுட் என கத்திக்கொண்டே ஓடிவந்தார். பலவிதமான ரிப்ளேவிற்கு பிறகு அந்த கேட்ச் அவுட்டா? சிக்சரா? என்ற குழப்பங்களுக்கிடையே அவுட்டென கொடுக்கப்பட்டது. அம்பயரின் அந்த முடிவானது ஒருவார காலமாக விவாதப்பொருளாகவே இருந்துவந்தது.
ஆடம் ஷாம்பாவின் மான்கட் ரன்அவுட் அவுட்டில்லையென மறுக்கப்பட்டது!
இன்னுமொரு பிபிஎல் போட்டியில், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. அப்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆடம் ஷாம்பாவால், செய்யப்பட்ட மன்கட் ரன் அவுட்டானது மீண்டுமொரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரன் அவுட்டா? இல்லையா? என்ற சர்ச்சையை கிளப்பியது.
Spicy, spicy scenes at the MCG.
Not out is the call...debate away, friends! #BBL12 pic.twitter.com/N6FAjNwDO7
— KFC Big Bash League (@BBL) January 3, 2023
போட்டியில் 20ஆவது ஓவரில் 5ஆவது பந்தை வீச வந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஆடம் ஷாம்பா, நான் ஸ்டிரைக்கில் நின்றிருந்த ரொகர்ஸ் என்ற வீரரை மான்கட் முறையில் ரன் அவுட் செய்தார். பேட்ஸ்மேனும் அவுட்டாகி விட்டதாக பெவிலியன் செல்ல முயன்றார். ஆனால் என்ன முடிவு எடுப்பதென்று தெரியாமல் திணறிய அம்பயர், மூன்றாவது அம்பயருடன் உரையாடல் செய்தபிறகு ஆடம் ஷாம்பா பந்துவீசுவதற்காக கையை முழுமையாக கோட்டை தாண்டி சுழற்றிவிட்டதால் அது நாட் அவுட் என்று அறிவிப்பதாக தெரிவித்தனர். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆக்ரோசமாக சத்தம் போட்டனர். பிறகு, ரன் அவுட் இல்லை என்று உறுதியாக அறிவிக்கப்பட்டது. அம்பயரின் அந்த முடிவும் சர்ச்சைக்குறிய ஒன்றாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு, பேட்டர் முழுவதுமாக கோட்டிற்கு வெளியாக சென்றுவிட்ட போது, இந்த முடிவு எப்படி சரியானதாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில் மீண்டும் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நிகழ்ந்த ஒரு சம்பவம், இப்படிலாம் ரூல் இருக்கிறதா என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது டெட் பால் தான, எப்படி சிக்சர் கொடுக்க முடியும்!
ஜனவரி 14 அன்று நேற்று மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதிகொண்டன. போட்டியின் 3ஆவது ஓவரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கிளார்க் என்ற வீரர் பேட்டிங் செய்தபோது, ரெனிகேட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வில் சதர்லேண்ட் வீசிய பந்தை அடிக்க, அதிக உயரத்திற்கு எழுந்த அந்த பந்து, டாக்லாண்ட்ஸ் மைதானத்தின் மூடிய கூரையின் மேல் அடித்து கீழே விழுந்தது. இதனால் அந்த பந்து டெட் பாலாக அறிவிக்கப்படும் என்ற எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் அந்த பந்து அம்பயரால் சிக்சராக அறிவிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மீண்டும் 16ஆவது ஓவரில் மற்றொரு பந்தும் அதேபோல் ஸ்டேடியத்தின் மேற்கூரையில் அடித்து, பிட்ச் பக்கத்துலயே விழுந்தது. ஆனால் அதுவும் டெட் பாலாக அறிவிக்கப்படாமல் சிக்சராக அறிவிக்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்துவரும் கிரிக்கெட் ரசிகர்கள் இதை சிக்சருக்கு கொடுப்பீர்கள், கூறையில் அடிக்கவில்லை என்றால் அது கேட்சாக தானே மாறும், அது எப்படி சிக்சராக மாறும். இதை விதிமுறையின் படி டெட் பாலாக தான் அறிவிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இரண்டாவது பிபிஎல் சீசன் வரையில் இதைப்போலான ஸ்டேடியத்தின் மேற்கூரையின் மேல் அடிக்கப்படும் பந்துகள் டெட் பாலாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது சீசனில் ரெனிகேட்ஸ் அணியின் கேப்டனான ஆரோன் ஃபின்ச் பந்தை மேற்கூரையின் மேல் அடிக்கப்பட்டது சர்ச்சையாக மாறிய நிலையில், அதன் பிறகு இதுபோன்ற சம்பவங்களை சிக்சராக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெப்பம் அதிகரித்திருக்கும் நிலையில் மைதானம் மூடிய நிலையில் விளையாடப்பட்டு வருகிறது. மெல்போர்னில் உள்ள டாக்லாண்ட்ஸ் ஸ்டேடியமானது, உட்புற கூரை வசதி கொண்ட உலகின் ஒரே ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.