விளையாட்டு வீரர்களுக்கு மரியாதையும், வசதியும் கிடைப்பதே தமது அமைச்சரவையின் இலக்கு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ரத்தோர், டெல்லியில் தனது அலுவலகத்திற்குச் சென்று இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விளையாட்டு வீரர்கள் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது முதன்மைப் பணியாக இருக்கும். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள வீரர்களை அனுப்ப வேண்டும். விளையாட்டு அமைச்சகம் அவர்களின் வசதியை கவனித்துக் கொள்ளும்” என்றார்.
மேலும், “விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. ஒருவர் தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு விளையாட்டு உதவுகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது எங்களது நோக்கமாக இருக்கும்” என்று கூறினார்.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு, அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது.