38 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஹாங்காங்! 155 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அபார வெற்றி!

38 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஹாங்காங்! 155 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அபார வெற்றி!
38 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஹாங்காங்! 155 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அபார வெற்றி!
Published on

ஆசியக் கோப்பைத் தொடரில் குரூப் சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்திய அணி பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளை அடுத்தடுத்து சாய்த்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளை சாய்த்து முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு அடியெடுத்து வைத்தது. இதில் 'ஏ' பிரிவில் சார்ஜாவில் இன்று நடைபெற்று வரும் 6-வது ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் சார்பில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். பாபர் அசாம் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, முகமது ரிஸ்வானுடன், பக்தர் சமான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணி ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 42 பந்துகளில் அரைசத்தை கடந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய பக்தர் சமான் 38 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருந்தார். இந்நிலையில் பக்தர் சமான் 53 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக களமிறங்கிய குஷ்தில் ஷா கடைசி ஒவரில் 4 சிக்ஸர்களை அட்டகாசமாக விளாசி ஹாங்காங் அணியை மிரட்டினார்.

இறுதியில் முகமது ரிஸ்வான் 78 (57) ரன்களும், குஷ்தில் ஷா 35 (15) ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் இழந்த அந்த 2 விக்கெட்டுகளையும் ஹாங்காங் அணியின் இஷான் கான் வீழ்த்தியிருந்தார். 194 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஹாங்காங் அணி தற்போது விளையாடியது.

கடின இலக்கை நோக்கி பொறுப்பாக விளையாட வேண்டிய கேப்டன் நிஜாகத் ஜான் 8 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த பாபர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். யஷிம் முர்தாசா, ஐசாஸ் கான், ஸ்காட் என தொடர்ந்து வந்த பலரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற அந்த அணி தள்ளாடத் துவங்கியது. முதல் 16 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்த ஹாங்காங் அணி, அடுத்த 16 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது.

கடைசியாக களமிறங்கிய வீரர்களும் பெவிலியனுக்கு பேஷன் ஷோ நடத்த, 38 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஹாங்காங் அணி. 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது பாகிஸ்தான் அணி. அந்த அணி தரப்பில் சதப் கான் 4 விக்கெட்டுகளையும், முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த போட்டி வரும் செப்டம்பர் 4 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com