ரசிகர்களை கவரும் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் : 10 ஆண்டுகால முயற்சி ஒரு பார்வை!

ரசிகர்களை கவரும் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் : 10 ஆண்டுகால முயற்சி ஒரு பார்வை!
ரசிகர்களை கவரும் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் :  10 ஆண்டுகால முயற்சி ஒரு பார்வை!
Published on

டெஸ்ட் கிரிக்கெட்டை கிரிக்கெட் விளையாட்டின் அசல் வடிவம் என பலரும் சொல்வதுண்டு. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டை மராத்தான் போட்டிகள் எனவும் சொல்லலாம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டு உதயமான போது டெஸ்ட் கிரிக்கெட் தான் விளையாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 1877இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் விளையாடியது தான் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச டெஸ்ட் போட்டி என சொல்லப்படுகிறது. மெல்பேர்னில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அதிலிருந்து தற்போது வரை சுமார் 2412 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவும், இங்கிலாந்தும் தற்போது அகமதாபாத் மைதானத்தில் விளையாடி வருவது டெஸ்ட் கிரிக்கெட்டின் 2412வது போட்டியாகும். 

ஒருநாள், டி20 மாதிரியான ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டுகளின் வரவுகளால் சில கிரிக்கெட் வீரர்களும், ஆர்வலர்களும், விமர்சகர்களும் பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட் அழிவின் விளிம்பில் இருப்பதாக விமர்சித்திருந்தனர். 

“பிரான்சைஸ் ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட் தொடர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துடிப்பதாவே தெரிகிறது. அதை கோலி மாதிரியான வீரர்களும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மாதிரியான அணிகளும் தான் மாற்றி டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முன் வர வேண்டும்” என கடந்த 2020 நவம்பரில் வலியுறுத்தி இருந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். 

ஒருநாள் போட்டிகள் 8 முதல் 9 மணி நேரத்திலும், டி20 கிரிக்கெட் போட்டிகள் மூன்று மணி நேரத்திலும் முடிந்து விடுவதும், அந்த போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் வாணவேடிக்கைகள் நடத்துவதுமாக ரசிகர்களுக்கு துளியளவும் பஞ்சம் வைக்காத த்ரில் கிடைப்பதால் ஷார்ட்டர் பார்மெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தது. குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு கமர்ஷியலைஸ் ஆனதும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. 

இப்படி ரகம் ரகமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு முட்டுக்கட்டைகள் எழுந்து கொண்டே இருந்தன. ‘இப்படியே போனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது வரலாற்றில் மட்டுமே இடம் பிடிக்கும்’ என்ற கவலை அதிகரிக்க தொடங்கியது 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான். குறிப்பாக இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. அதோடு கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அதற்கான வழிகளையும் முன்னெடுக்க ஆரம்பித்தன. குறிப்பாக இதில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் கொஞ்சம் ஓவர்டைமாக வேலை செய்தது. 

அந்த சூழலில் தான் 2009இல் ஐசிசி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஒத்த கருத்து கொண்ட புள்ளியில் இணைந்தன. டெஸ்ட் கிரிக்கெட்டை பகல் இரவு போட்டிகளாக நடத்தலாம் என்ற யோசனையை அப்போதைய இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் Giles Clarke, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதெர்லாந்த் மற்றும் ஐசிசி பொது மேலாளர் டேவ் ரிச்சர்ட்ஸன் மாதிரியானவர்கள் முன்மொழிந்தனர். 

தொடர்ந்து பரிசோதனை முயற்சியாக பல்வேறு நாடுகளில் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் தொடர்களில் சூடு பிடித்தன. டிரையல் அண்ட் எர்ரர் முறையில் பிங்க் நிற பந்துகளை கொண்டு கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டன. அப்படியே கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அந்த பிங்க் பந்தை சோதிக்க தொடங்கியது. இதில் இங்கிலாந்து ஒருபடி மேலே சென்று 2010இல் இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு இடையே பகல் இரவு டெஸ்ட் போட்டியை நடத்தவும் முயற்சிகளை முன்னெடுத்தது. இருந்தாலும் அது முயற்சியாகவே முடிந்தது. 

பாகிஸ்தான் ஆரஞ்சு நிற பந்து கூட வைத்து முயற்சி செய்தது. தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என 2014 வரை பல்வேறு சோதனை வெள்ளோட்டம் பிங்க் நிற பந்தில் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 2015இல் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் அடிலெய்ட் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டி சர்வதேச கிரிக்கெட்டின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக அமைந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்தது. அதே நேரத்தில் ரசிகர்களும் அதிகளவில் அந்த போட்டியை காண குவிந்திருந்தனர். வழக்கமாக ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் அதிகளவில் குவிவார்கள். ஆனால் அந்த போட்டி வரலாற்றை மாற்றி இருந்தது. ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கான பிள்ளையார் சுழியை போட பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, இந்தியா, வங்கதேசம் என ஒவ்வொரு நாடுகளாக பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. 

இதில் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2019இல் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியது தான் இரு நாடுகளுக்குமான முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக அமைந்தது. மதிய நேரத்தில் ஆரம்பமாகும் இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் இரவு 9.30 அல்லது 10.30 வரை நடப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இதுவரை மொத்தம் 16 பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. இங்கிலாந்து 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் எல்லாம் அதற்கும் கீழான போட்டிகளில் தான் விளையாடியுள்ளன. அதுமட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரனைகளும் ஒரே ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர். சர்வதேச டெஸ்ட் தொடர்களில் ஹோஸ்ட் செய்யும் நாடுகள் அண்மைய காலமாக பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது. 

இந்தியா இதுவரை இரண்டு பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளது. அதில் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வியையும் சந்தித்துள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் இந்தியா விளையாடி வருகிறது. 

பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதே நேரத்தில் இங்கிலாந்து 2017க்கு பிறகு பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த முன்வரவில்லை. “பகல் நேரங்களில் நடத்தும் போட்டிகளுக்கே எங்கள் நாட்டில் அதிகளவில் ரசிகர்கள் வருகிறார்கள்” என அதற்கு இங்கிலாந்து காரணம் சொன்னது. 

2018க்கு பிறகு அமீரகத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை பாகிஸ்தான் பகல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறது. பகல் நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. வங்கதேசம் தங்களுக்கு பிங்க் பால் குறித்த சங்கடம் இருப்பதாக சொல்லி இதுவரை ஒரே ஒரு பகல் இரவு போட்டியை கூட ஹோஸ்ட் செய்யாமல் உள்ளது. 

“பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்தில் விளையாடுவது சவாலான காரியம். குறிப்பாக சூரியன் அஸ்தமிக்கும் போது பந்தை கூர்ந்து கவனித்து பேட்ஸ்மேன்கள் விளையாடியாக வேண்டும்” என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். 

-எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com