பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிங் தீம்மை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நடால், 12வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், இரண்டாம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், நான்காம் நிலை வீரர் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் மோதினர். 3 மணி ஒரு நிமிடம் நீடித்த இந்த விறுவிறுப்பான மோதலில், ரஃபேல் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொம்னிக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதன் மூலம், ‘களிமண் தரை’ போட்டிகளின் ராஜா என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தி யுள்ளார். இது அவருக்கு 12-வது பிரெஞ்ச் ஓபன் பட்டம் ஆகும். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.18 கோடியும், 2-வது இடம் பிடித்த டொமினிக்கிற்கு ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை அதிகம் முறை வென்றவர் என்ற பெருமையை நடால் பெற்றார். இதுவரை 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.