காயம் காரணமாக, பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் ஆசிய கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முஸ்ஃபிகுர் ரஹிமின் அபார சதத்தால் அந்த அணி 261 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி, பங்களாதேஷின் சிறப்பான பந்துவீச்சால் 35.2 ஓவரில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.
முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்த போது, தொடக்க ஆட்டக்காரராக தமிம் இக்பாலும் லிட்டன் தாஸும் களமிறங்கினர். லிட்டன் தாஸ் முதல் ஓவரில் மலிங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இரண்டாவது ஓவரை லக்மல் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்து, தமிமின் இடது கை மணிக்கட்டில் பலமாகத் தாக்கியது. இதனால் வலியால் துடித்த அவர் ரிடையர் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. கையில் கட்டுப் போட்டபின் டிரெஸ்சிங் ரூம் திரும்பினார்.
இந்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு வலியோடு மைதானத்துக்குள் களமிறங்கினார் தமிம். இதனால் எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து ஆடிய அவர் மறுமுனையில் முஸ்ஃபிகுர் 32 ரன்கள் சேர்க்க காரணமாக இருந்தார். இந்நிலையில் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். காயம் குணமாக ஆறுவாரம் காலம் ஆகும் என்பதால் அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இது, அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.