ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை, ரசிகர்கள் செல்லப்பெயரிட்டு அழைத்து வருகிறார்கள்.
சென்னை வீரர் இம்ரான் தாஹிர், ரசிகர்களால் 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். பராசக்தி படத்தில் இடம்பெறும் வசனம் போல "ஓடினார், ஓடினார் மெரினா பீச்சிற்கே ஓடினார்" என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டு ரசிகர்கள் இட்ட பெயரே பராசக்தி எக்ஸ்பிரஸ். விக்கெட் வீழ்த்தியவுடன் மைதானத்தை கொண்டாட்டத்தால் ஓடிக் கடக்கும் தாஹிர் மீம் கிரியேட்டர்களின் ஆல் டைம் பேவரைட்.
சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ 'சாம்பியன்' என்று அழைக்கப்படுகிறார். விக்கெட் விழ்த்தியவுடன் சாம்பியன் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதால் இப்பெயர் பெற்றுள்ளார். சென்னை அணி வெற்றி வாகைச் சூடிய போது பிராவோ ஆட, தாஹிர் ஓட மைதானமே சந்தோஷத்தில் திகைத்தது என்றே ரசிகர்கள் பதிவிடுவார்கள்.
இந்திய இளம் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை 'சர்' என்று செல்லமாக அழைக்கிறார்கள் ரசிகர்கள். வித்தியாசமான சிகை அலங்காரத்தால் தோன்றும் இவர், சென்னை ரசிகர்களுக்கு தனது திறமையால் கிரிக்கெட் விருந்து படைத்து வருகிறார்.
உலகக் கோப்பை இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் சென்னை வீரர் கேதார் ஜாதவ். இவரை 'அதார் உதார் கேதார்' என்று ரைமிங்குடன் அழைத்து வருகிறார்கள் ரசிகர்கள். ஆரவாரமின்றி அசத்தும் கேதார் என்பதை குறிக்கவே அதார் உதார் கேதார் என்று அழைக்கிறார்கள் ரசிகர்கள்.
இங்கிலாந்து இளம் வீரர் சாம் பில்லிங்ஸ், 'தம்பி' என்று உறவுமுறையோடு அழைக்கப்படுகிறார். வயது குறைந்தவரான இவரை, தமிழக ரசிகர்கள் தங்களது தம்பியாகவே பாவித்து அழைக்கிறார்கள்.
சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள், தோனியின் ரசிகர்கள் என்று தனி தனியே பிரித்துபார்க்கமுடியாது. அப்படி சென்னை அணியின் அங்கமாக மாறி, அணியை அரியணையில் ஏற்றுபவர் தோனி. இவரை 'தல' என்று கெத்தாக அழைக்கிறார்கள் சென்னை ரசிகர்கள்.
அதே போல் தோனியின் வலதுகரம் போல் செயல்படும் ரெய்னாவை ''சின்ன தல'' என்று அன்பாக அழைக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும் தமிழில் ட்வீட் செய்து அசத்தும் ஹர்பஜன் சிங், சென்னை ரசிகர்களிடையே 'புலவர்' என அழைக்கப்படுகிறார்.