டெஸ்ட் போட்டிகளில் 8 முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவின் சாதனையை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் சமன் செய்தார்.
ஜிம்பாப்வே அணிக்கெதிராக கொழும்புவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ரங்கனா ஹெராத் இந்த சாதனையைப் படைத்தார். போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹெராத், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 132 போட்டிகளில் 8 முறை பத்து விக்கெட்டுகளை அனில் கும்ப்ளே வீழ்த்தியுள்ளார். அவரது இந்த சாதனையை 81ஆவது டெஸ்ட் போட்டியிலேயே ஹெராத் சமன் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 22 முறை பத்து விக்கெட்டுகள் வீழ்த்தி, இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், 10 முறை பத்து விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே இரண்டாவது இடத்திலும், மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ரிச்சர்ட் ஹேட்லி 9 முறை பத்து விக்கெட்டுகள் வீழ்த்தி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் 4ஆவது இடத்துக்கு ஹெராத் முன்னேறியுள்ளார்.