'அவர் அபாயகரமான பேட்ஸ்மேன்' - சங்கக்காரா புகழ்ந்த ஐபிஎல் வீரர் யார்?

'அவர் அபாயகரமான பேட்ஸ்மேன்' - சங்கக்காரா புகழ்ந்த ஐபிஎல் வீரர் யார்?
'அவர் அபாயகரமான பேட்ஸ்மேன்' - சங்கக்காரா புகழ்ந்த ஐபிஎல் வீரர் யார்?
Published on

கேப்டனாக இருந்தாலும் கற்றுக்கொள்வதில் இப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார் என சஞ்சு சாம்சனை பாராட்டியுள்ளார் குமார் சங்கக்காரா.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தமுறை எப்படியாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு உள்ளது. அதற்கேற்றவாறு மெகா ஏலத்தில் வலுவான அணியை கட்டமைத்தது.  

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் இலங்கை கேப்டனுமான குமார் சங்கக்காரா, 'சஞ்சு சாம்சன் சிறந்த டி20 வீரர்களில் ஒருவர்' எனப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் சங்கக்காரா கூறுகையில், ''கடந்த 2 ஐபிஎல் சீசன்களில் சிறப்பான பேட்டிங் மூலம் சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் இடம்பிடித்ததை பார்த்தேன்.

சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான வீரர், அபாயகரமான பேட்ஸ்மேன், மேட்ச் வின்னர். ஒரு பேட்ஸ்மேனுக்கு தேவையான அத்தனை திறமைகளையும் அவர் கொண்டுள்ளார். கடந்த சீசனில் நான் பயிற்சியாளராக வருவதற்கு முன்பே சாம்சன் கேப்டனாக இருந்தார். நான் அவரை நன்கு அறிந்திருக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது அவருக்கு அவ்வளவு ஆர்வம். அவர் இந்த அணியில் அறிமுகமானார். அதை மதிக்கிறார். அவர் ஒரு கேப்டன், ஆனால் கற்றுக்கொள்வதில் இப்போதும் ஆர்வத்துடன் இயங்குகிறார். சாம்சனுக்கு இயற்கையாகவே தலைமைப் பண்புகள் உள்ளது. அவர் தனது கேரியரில் மேலும் சிறப்பாக வளருவார் பாருங்கள்.

சாம்சன் அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார்.  கேப்டன் பொறுப்புக்கு அவர் முழுத் தகுதியானவர். அவருடன் பணிபுரிவது மிகவும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் உள்ளது, அது எப்போதாவது வெளிவரும்" என்று சங்கக்காரா கூறினார்.

சமீபத்தில்  சஞ்சு சாம்சன் குறித்து இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், “சஞ்சு சாம்சன் மிகவும் திறமையான வீரர். ஐபிஎல் தொடரில் இவரது ஆட்டத்தை பார்ப்பதற்கே மிகவும் அற்புதமாக இருக்கும். தனது திறமையை மிகச்சரியான முறையில் வெளிப்படுத்த கூடியவர். ஒருவருக்கு என்னதான் திறமை இருந்தாலும், அதனை சரியாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. அது சாம்சனிடம் இருக்கிறது” எனக் கூறியது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: ஐபிஎல் 2022 : அறிமுக தொடரில் சோபிக்குமா குஜராத் டைட்டன்ஸ்? - ஓர் முழு அலசல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com