ரஞ்சி தொடரில் சாதித்த சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டதும், சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததும் விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் 2021-2022ம் ஆண்டுக்கான ரஞ்சி சீசனில் மட்டும் சர்ஃபராஸ் கான் 122.75 சராசரியோடு 982 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் நடப்பு ரஞ்சி சீசனில் 107.75 சராசரியோடு 431 ரன்களை குவித்துள்ளார். எனினும் சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், ''சர்ஃபராஸ் கானின் பெயர் ஏன் அணியில் இல்லை என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக அவர் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று நினைத்து இருப்பார். ஏனெனில் மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கானை தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதே போன்று பும்ராவின் பெயரும் ஏன் இல்லை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதைவிட சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாது குறித்து தான் எனக்கு கவலை அளிக்கிறது. சூரியகுமாரை நீங்கள் தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்றால் ஒரு இடம் காலியாக இருக்கிறது என்று தானே அர்த்தம் .அப்போது அந்த இடத்தில் சப்ராஸ்கான் தான் சரியான நபராக இருந்திருப்பார். அவருடைய சராசரி 80 என்ற அளவில் இருக்கிறது.
டான் பிராட்மேனுக்கு பிறகு அவர்தான் அதிக சராசரி வைத்திருக்கிறார் என்ற ரெக்கார்டும் இருக்கிறது. இந்திய அணியில் இடம் பெற சர்ஃபராஸ் கானால் என்ன முடியுமோ அத்தனையும் அவர் செய்துவிட்டார். நிச்சயமாக இது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஒருவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றால் நீங்கள் அவருக்கு தானே வாய்ப்பு வழங்க வேண்டும். சூர்யாகுமாரா, சர்ஃபராஸ் கானா என்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் சர்ஃபராஸ் கானுக்கு தான் வாய்ப்பு வழங்குவேன்'' என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்