ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9வது பதிப்பானது அக்டோபர் 3 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில், குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை முதலிய 5 அணிகளும், குரூப் பி-ல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா முதலிய 5 அணிகளும் இடம்பிடித்துள்ளன.
அந்த வகையில், இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் நேற்று முதலாவது லீக் போட்டியில் சந்தித்தன. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் டெவின் 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 2 விக்கெட்கள் எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாப தோல்வியைச் சந்தித்தது.
முன்னதாக, இந்தப் போட்டியில் தீப்தி சர்மா 14வது ஓவரை வீசினார். அப்போது சோஃபி டெவின் - அமீலியா கேர் கூட்டணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அந்த ஓவரின் கடைசிப் பந்தில் அமீலியா கேர், லாங் ஆஃப் திசையில் அடித்துவிட்டு விரைவாக ரன் எடுக்க ஓடினார். ஒரு ரன் ஓடி முடித்தபின், ஹர்மன்ப்ரீத் கவுர் கைகளில் பந்து இருந்தது. தொடர்ந்து அமீலியா கேர் 2வது ரன்னை எடுப்பதற்காக ஓட, ஹர்மன்ப்ரீத் கவுர் நேராக விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைகளில் த்ரோ செய்தார். அதனை தாவிப் பிடித்த ரிச்சா கோஷ், உடனடியாக ரன் அவுட் செய்து அசத்தினார். அமீலியா கேர் ரன் அவுட்டானதை ஏற்றுக்கொண்டு களத்தில் இருந்து பெவிலியனை நோக்கி நடந்தார். இதனால் இந்திய வீராங்கனைகள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள், முதல் ரன் ஓடி முடித்தபின், ஓவர் முடிந்ததாக அறிவித்தது தெரியவந்தது. ஓவர் முடிந்ததாக அறிவித்த பின், நியூசிலாந்து வீராங்கனைகள் 2வது ரன்னிற்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் நியூசிலாந்து வீராங்கனைகளுக்கு தண்டனை கொடுக்காமல், நடுவர்கள் இருவரும் அமீலியா கேரை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தனர். இதனால் கடுப்பான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உடனடியாக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரும் 4வது நடுவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இந்திய வீராங்கனைகள் எந்த தவறும் செய்யாத போது, அவுட் கொடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், ”2வது ரன்னிற்கு முன்பாகவே ஓவர் என்று நடுவர்கள் கூறியுள்ளனர். இது யாரின் தவறு” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர், தனது பதிவை நீக்கிவிட்டார்.