மைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்

மைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்
மைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்
Published on

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தேசிய கீதம் இசைக்கும்போது மயங்கி சிறுமியை இந்திய கேப்டன் கவுர் தனது கையால் தூக்கிச்சென்றார்.

2018ஆம் ஆண்டு மகளிர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியையும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும் வென்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இழக்கை எட்டி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை போட்டி என்பதால் ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்னரும், போட்டியில் பங்கேற்கும் இரண்டு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்படும். அப்போது ஒவ்வொரு வீரரின் முன்னரும் ஒரு குழந்தையை நிற்க வைப்பார்கள். இந்த முறை கால்பந்து போட்டியில் பின்பற்றப்பட்டு வரும் முறையாகும். தற்போது இது கிரிக்கெட்டிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்களின் முன்னால் ஒரு குழந்தை நிற்க தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

அப்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் முன்னால் நின்ற சிறுமி மயக்க நிலையை அடைந்துள்ளார். இதை உணர்ந்த கவுர், தேசிய கீதம் முடியும் வரை காத்திருந்தார். பின்னர் தேசிய கீதம் முடிந்த உடனே அந்தச் சிறுமியை, அவரே தனது கைகளில் தூக்கிச்சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். மருத்துவக்குழு அந்தச் சிறுமியை சோதனை செய்த பின்னர், வெயிலின் தாக்கத்தால் அச்சிறுமி மயங்கியதாக தெரிவித்துள்ளது. கவுரின் இந்தச் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com