ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்தின் டெர்பி நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 35 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க வீரர்களான ஸ்மிர்தி மந்தனா மற்றும் பூனம் ராவத் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதையடுத்து கைகோர்த்த கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர் இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் குவித்தது. கேப்டன் மிதாலி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 101 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் - தீப்தி ஷர்மா ஜோடி கைகோர்த்தது.
ஒருபுறம் தீப்தி தடுப்பாட்டத்தில் ஈடுபட, மறுபுறம் ஹர்மன்ப்ரீத் விஸ்வரூபம் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிதறடித்த ஹர்மன்ப்ரீத் கவுர் 90 பந்துகளில் சதமடித்தார். சதமடித்த பின்னர், ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டிய அவர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 20 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் விளாசினார். தீப்தி ஷர்மா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வேதா கிருஷ்ணமூர்த்தி 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேகன் ஸ்கட், கிறிஸ்டியன் பீம்ஸ், எல்சி விலானி மற்றும் ஆஸ்லே கார்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.