’ஆஸ்திரேலிய வீரர் அஸ்டன் அகார் சுழல் பந்தை பதம் பார்க்க வேண்டும் என்று நினைத்தே ஆடினேன். அதில சில சிக்சர்கள் கிடைத்தது’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் பாண்ட்யா கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற போட்டியில் 78 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பின்னர் அவர் கூறும்போது, ’ இந்தப் போட்டியில்தான் அதிக பந்துகளை சந்தித்து விளையாடினேன். சிறப்பாக இருந்தது. நான் இந்தப் போட்டியில் நான்காவது இடத்தில் இறக்கப்பட்டேன். ’அடுத்து நீங்கதான் இறங்கணும்’ என்று என்னிடம் சொல்லப்பட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. எந்த இடத்தில் இறங்கி விளையாடினாலும் அதை, அணிக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்றுதான் நினைப்பேன். இந்தப் போட்டியிலும் அப்படித்தான் செய்தேன். விராத் கோலி அவுட் ஆனபின் அழுத்தம் ஏற்பட்டதா? என்று கேட்கிறார்கள். இல்லை. எனக்குப் பின்னால் தோனி இருந்தார். அதனால் மெதுவாக அடித்து ஆடினாலே வெற்றிபெற்றுவிடுவோம் என்று நினைத்தே விளையாடினோம். அடுத்தப் போட்டியிலாவது ஆட்டத்தை நான் முடிக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்தப் போட்டியில், ஆஸி.வீரர் அஸ்டன் அகார் சுழல் பந்துவீச்சில் சில சிக்சர்களை அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தே அடித்தேன். அது (4 சிக்சர்) கிடைத்தது’ என்றார்.