ஹர்த்திக் பாண்டியா; கே.எல்.ராகுல் விளையாடத் தடை

ஹர்த்திக் பாண்டியா; கே.எல்.ராகுல் விளையாடத் தடை
ஹர்த்திக் பாண்டியா; கே.எல்.ராகுல் விளையாடத் தடை
Published on

பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு விளையாடத் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றினை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு தொகுப்பாளர் கேட்கும் பல கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.

இதில் பிடித்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், இடங்கள், பாடல் என பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அதில் இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரா அல்லது விராட் கோலியா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இருவரும் சற்றும் யோசிக்காமல் கோலியின் பெயரை முன் மொழிந்தனர். மேலும் ஹர்த்திக் பாண்டியா பெண்கள் குறித்தும் இனவெறியை தூண்டும் வகையிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சமூக வலைத்தளவாசிகள் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை விட கோலியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பிசிசிஐ பெண்கள் குறித்து தவறாக கருத்துகளை தெரிவித்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 


இதைத்தொடர்ந்து பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறித்து 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு நிர்வாகிகள் குழு நோட்டீஸ் அனுப்பியது. 

இதனிடையே ஹர்த்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், ஹர்த்திக் பாண்டியா ட்விட்டரில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது எனவும் கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு டிவி நிகழ்ச்சியில் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் குழுத் தலைவர் வினோத் ராய் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து பதிலளிக்க ஹர்த்திக் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் பதிலில் திருப்தி இல்லை எனவும் தெரிவித்த அவர் 2 போட்டிகளில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு விளையாடத் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com