ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில், காலில் ரத்தம் வழிந்தபடியே சென்னை அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார் என்று, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் களம் கண்டன. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி. மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
சென்னை அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றவர் வாட்சன். இவர் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வாட்சன், கிட்டத்தட்ட ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்றார். வாட்சன் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் ஐபிஎல் இறுதிப்போட்டியின் போக்கே மாறி இருக்கும். ஆனால் சென்னை அணி தோல்வியை சந்தித்ததால் வாட்சனின் போராட்டம் வீணானது. ஆனால் தன் காலில் அடிபட்டும் கூட ரத்தம் வழிந்தபடியே வாட்சன் பேட்டிங் செய்திருக்கிறார். யாருமே இதை கவனிக்காத நிலையில் இது குறித்து சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் வாட்சனுக்கு அடிப்பட்டு காலில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் சொல்லாமல் அணிக்காக வாட்சன் விளையாடினார். போட்டிக்கு பின்னர் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஹர்பஜனின் பதிவுக்கு பிறகே வாட்சன் ரத்தக்கறையுடன் விளையாடிய புகைப்படத்தை அனைவரும் கவனித்துள்ளனர். அணி வித்தியாசம் இன்றி அனைவருமே வாட்சனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இது தான் வேலையின் மீதுள்ள பற்று என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வாட்சன் தான் இந்த ஐபிஎல்லின் உண்மையான ஹீரோ என்றும் பலர் நெகிழ்ச்சியாக தெரிவிக்கின்றனர்.
ஐபிஎல் போட்டிகளின் தொடக்க ஆட்டங்களில் வாட்சன் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் அவர் மீது முழு நம்பிக்கை வைத்த சென்னை அணி கேப்டனும், பயிற்சியாளரும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினர். தன் மீது அணி வைத்த நம்பிக்கைக்கு ஈடாக இரு மடங்கு உழைப்பை வாட்சன் கொடுத்து இருக்கிறார் என்று சிலாகிக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.