முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்பளேதான் இந்திய கிரிக்கெட்டின் ஒப்பற்ற மேட்ச் வின்னர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இப்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் ஒரு காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். ஒரு சில போட்டிகளுக்கு ஹர்பஜன் சிங் மும்பை அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். என்றைக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆரம்பித்தாரோ அன்று முதல் தமிழில் ட்வீட் போடுவது என அமர்க்களப்படுத்தி வருகிறார். இப்போது தமிழில் "ப்ரெண்ட்ஷிப்" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால், பல மாதங்களாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைத்தளம் வாயிலாகவே உரையாற்றி வருகின்றனர். இதேபோல பேட்டியையும் கொடுத்து வருகின்றனர். அதேபோல ஹர்பஜன் சிங் "ஸ்போர்ட்ஸ்ஸ்டார்" இதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவரிடம் இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர் யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர் " என்னுடைய பார்வையில், அனில் கும்பளேதான் இந்தியாவின் மிகச் சிறந்த மேட்ச் வின்னர். அவர் மட்டுமே இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த மேட்ச் வின்னர் என நினைக்கிறேன். பொதுவாக அவர் பந்தைச் சுழற்றி வீசமாட்டார் ஆனால் சுழற்பந்துவீச்சாளர் என மக்கள் குறை கூறுவார்கள். ஆனால் அவரின் மன உறுதி எத்தகையது என்றால் எந்தவொரு பேட்ஸ்மேனையும் எந்தச் சூழலிலும் அவரால் அவுட்டாக்க முடியும், அதை நிரூபித்துக்காட்டி இருக்கிறார்" என்றார்.