பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் மார்டின் கப்தில் இதிலும் சதம் அடித்தார்.
பங்களாதேஷ் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. நேப்பியரில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர், மார்டின் கப்தில் அபார சதம் அடித்தார்.
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கிறிஸ்ட் சர்ச்சில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, 49.4 ஓவர்களில் 226 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக முகமது மிதுன் 57 ரன்னும் சபீர் ரகுமான் 43 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குஷான் 3 விக்கெட்டும் அஸ்லே, நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 36.1 ஓவரில் 229 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக் காரர் மார்டின் கப்தில் இந்தப் போட்டியிலும் அபாரமான சதம் அடித்தார். அவர் 88 பந்தில், 4 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 118 ரன் குவித்தார். இது அவருக்கு 16 வது சதம். கேப்டன் கேன் வில்லியம்சன் 65 ரன்னுடனும் ராஸ் டெய்லர் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற் றியை அடுத்து தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிவிட்டது.