சிட்னி டெஸ்ட் போட்டியின்போது ரவிச்சந்திரன் அஸ்வின் - விஹாரி இணையை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. அன்றைய ஆட்டத்தில் அஸ்வின் பேட்டிங் செய்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், பின்னாலிலிருந்து அஸ்வினை கடுமையாக பேசி கொண்டிருந்தார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
கெட்ட வார்த்தைகளையும், "உங்கள் அணியில் உன்னை யாரேனும் மதிப்பார்களா, ஆனால் என்னை மதிப்பார்கள், ஐபிஎல்லில் உன்னை ஏன் எடுக்கத் தயங்குகிறார்கள் என்று தெரியுமா?" என கண்டபடி பேசினார். ஒருகட்டத்தில் எல்லை மீற "பேச்சை நிறுத்தாவிட்டால், ஆட்டத்தை நிறுத்துவேன்" என அஸ்வின் கோபப்பட பிரச்னை பூதாகரமானது. பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது, தனது நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் பெய்ன்.
மேலும், "அன்று நான் மிக மோசமாக நடந்து கொண்டேன். என் தலைமை சரியில்லை. கடந்த 18 மாதங்களாக அமைத்த உயர் தரத்தில் கறை படிந்து விட்டது. நான் ஆட்டம் முடிந்தவுடன் அஸ்வினிடம் பேசினேன். இருவரும் சிரித்து மகிழ்ந்தோம்" என்று விளக்கம் கொடுத்தார். இருந்தாலும் பெய்னின் செயல்பாடு விமர்சனத்துக்குளாகி உள்ளது. பல முன்னாள் வீரர்களும் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல், டிம் பெய்னுக்கு இதுதொடர்பாக ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆஸ்திரேலிய கேப்டனாக தான் இருந்த காலத்தில் அவர் செய்ததைப் போலவே, தனது தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுமாறு பெய்னுக்கு அறிவுறுத்தினார். "இதுபோன்ற வசைபாடுதல் மலிவானது என்று நான் நம்புகிறேன். எந்தவொரு பணியிடத்திலும் வசைபாடுதல் ஏற்புடையதல்ல. இது ஒருவரின் வலிமையைக் காட்டாது. மாறாக, இது ஒருவரின் கேரக்டரின் பலவீனத்தைக் காட்டுகிறது.
பேட் மற்றும் பந்து பேசுவதை அனுமதிக்க அணியில் ஈர்க்கும்படி நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் மற்றும் மில்லியன் கணக்கான சிறிய சிறுவர் சிறுமிகளுக்கு சிறந்த முன்மாதிரிகளாக வரவேண்டும் என உங்களை கேட்டுக்கொள்கிறேன். அது அவர்கள் விளையாட்டு வீரர்களின் மோசமான உள்ளுணர்வுகளையும் செயல்களையும் பின்பற்றத் தொடங்கக்கூடாது என்பதற்காக.
இது நீங்கள் விட்டுச்செல்லக்கூடிய மிகப்பெரிய மரபு. நீங்கள் ஆஸ்திரேலியாவை திறமை, தைரியம் மற்றும் நகைச்சுவையுடன் வழிநடத்தியுள்ளீர்கள், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேப்டவுனில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் உருவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளீர்கள். கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து, நீங்கள் இருந்த வழியில் தொடர்ந்து முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.