மழையால் போட்டி ரத்து: சோகத்துடன் வெளியேறியது பெங்களூரு அணி!

மழையால் போட்டி ரத்து: சோகத்துடன் வெளியேறியது பெங்களூரு அணி!
மழையால் போட்டி ரத்து: சோகத்துடன் வெளியேறியது பெங்களூரு அணி!
Published on

பெங்களூரு-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், பிளே ஆப் சுற்றில் இருந்து பெங்களூரு அணி சோகத்துடன் வெளியேறியது.

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரவு 8 மணிக்கு தொடங்கவிருந்த இந்தப் போட்டி மழையால் தாமதமானது.

எனவே 10 நிமிடங்கள் தாமதமாக போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டி 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் அதன்பின்பும் மழை விடவில்லை. பின்னர் மழை விட்டதும், 5 ஓவர் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது. 

முதலில் பெங்களூரு அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராத் கோலியும் டிவில்லியர்ஸும் களமிறங்கினர். வருண் அரோன் முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு தூக்கினார் விராத் கோலி. மறுமுனையில் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரிகளை விளாசினார் வில்லியர்ஸ். அடுத்த ஓவரை ஸ்ரேயாஸ் கோபால் வீசினார். சிக்சர், பவுண்டரி என விளாசிய கோலி, அந்த ஓவரின் 4 வது பந்தில் 25 ரன்னில் கேட்ச் ஆனார்.

அவர் 7 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் இந்த ரன்களை எடுத்தார். அடுத்த பந்தில் வில்லியர்ஸும் (4 பந்தில் 10 ரன்), அதற்கடுத்த பந்தில் ஸ்டோயினிஸும் (0) ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் கோபால். அடுத்து வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் 5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு அந்த அணி, 62 ரன் எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டும் ஓஷானே தாமஸ் 2 விக்கெட்டும் உனட்கட், பரங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 3.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்திருந்தபோது, மறுபடியும் கொட்டித் தீர்த்தது மழை. இதனால், இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டது.

இதன் காரணமாக, அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியது. 3 வது ஆண்டாக விராத் கோலி தலைமையிலான அணி, முதல் சுற்றுடன் வெளியேறுகிறது. ராஜஸ்தான் அணிக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு குறைந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com