ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல்லுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். 2015-ல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தவர். அண்மையில் இவர் தனக்கு மனரீதியாக பிரச்னை இருப்பதாகவும், அதனால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கோரியிருந்தார். தேசிய அணியில் இடம் பெறாவிட்டாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், மேஸ்க்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினி ராமன் என்ற பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகின. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்களை இவர்களே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக்ஸ்வெல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது அதிலிருந்து அவர் மீள உதவியதில், வினி ராமனுக்கு முக்கியப் பங்குள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் மேக்ஸ்வெல் வினி ராமனிடம், நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு வினி ராமனும் ஒப்புக் கொண்டகதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, மேக்ஸ்வெல்லும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாடைமாடையாக மோதிர சின்னத்தோடு ஜோடியாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.
இப்போது மேக்ஸ்வெல்லுக்கும், வினி ராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் இருவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேக்ஸ்வெல் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படும் 27 வயதான வினி ராமனின் பெற்றோர் தென்இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் வினி ராமன் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில்தான். அவர் மெல்போர்னில் மருந்தக பிரிவில் படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.