ஃபார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட் உலகில் யாருமே இல்லை என்கிறார் ரவி சாஸ்திரி.
வங்கதேசத்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை (டிச.4) நடக்கவிருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. தற்போது இவர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியதால் முழு பலத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் வங்கதேச சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பையில் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி, அதே ஃபார்மை வங்கதேசத்துக்கு எதிராகவும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டி20 உலகக் கோப்பையில் சொதப்பிய ரோகித் சர்மா, இந்த தொடரிலாவது தன்னுடைய இழந்த ஃபார்மை மீட்டெடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் பேட்டிங் நிலைமை தொடர்பாக பிரபல கிரிக்கெட் பத்திரிகையாளர் விமல் குமார், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிர்ச்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, “தனக்கான ஃபார்மை இழப்பது என்பது அனைத்து வீரர்களுக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஃபார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட் உலகில் யாருமே இல்லை. அனைவருக்கும் இது நடந்துள்ளது. கவாஸ்கர், கபில்தேவ், டெண்டுல்கர், தோனி ஆகியோருக்கு கூட ஃபார்மை இழந்து தவித்துவந்த காலம் உண்டு.
ஒரு வீரர் எப்போதுமே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துகொண்டே இருக்க முடியாது. அது மனித இயல்பு. அதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தொடரில் ஃபார்மை இழந்தால் அடுத்த தொடரிலோ அல்லது அதற்கடுத்த தொடரிலோ ஃபார்முக்கு திரும்பி விடுவார்கள். இது மிகவும் உணர்வுபூர்வமானது. எனவே ஏற்றம் இறக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது. கிரிக்கெட் வீரர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல'' என்றார்.
தவற விடாதீர்: கிராமத்திலிருந்து புயலாய் கிளம்பியவனின் கோப்பை கனவு! மைதானத்திலேயே கண்கலங்கிய உனாத்கட்!