பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி தனது புத்தகத்தின் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் காம்பீரை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். ரசிகர்களிடையே பெரும் ஆர்வமும் இருக்கும். அதேபோலதான் இருநாட்டு வீரர்களும் மைதானத்தில் வெற்றிக்காக கடுமையாக போராடுவர். சில சமயங்களில் வீரர்களிடையே வாக்குவாதமும் மோதல் போக்கும் ஏற்படுவது உண்டு. அப்படிதான் 2007 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது, அப்போது நடைபெற்ற போட்டியில் ஷாகித் அப்ரிதியும், கவுதம் காம்பீரும் வாக்குவாதத்திலும் மோதல் போக்கிலும் ஈடுபட்டனர். பின்பு, இந்த மோதல் நடுவர்களால் தீர்த்துவைக்கப்பட்டது. இப்போது இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றுவிட்ட நிலையிலும் தொடர்ந்து இவர்களிடையே மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அண்மையில் ஷாகித் அப்ரிதி "கேம் சேஞ்ஜர்" என்ற தலைப்பில் தன்னுடைய கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் தனக்கு நிகழ்ந்த அனுபவங்கள் குறித்தும் விவரித்திருக்கிறார். அதே புத்தகத்தில் கவுதம் காம்பீரை கடுமையாக சாடியிருக்கிறார் அதில் "கவுதம் காம்பீருக்கு குணநலனில் கோளாறு இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் சரியில்லை. அவருக்கென்று ஒரு தனித்தன்மையும் கிடையாது. அவரை போன்ற கிரிக்கெட் வீரர்கள் எப்போதாவதுதான் இருப்பார்கள். கிரிக்கெட்டில் பெரிய சாதனை செய்த வரலாறும் இல்லை. ஆனால் மனதில் டான் பிராட்மேனும், ஜேம்ஸ் பாண்டும் கலந்து செய்யப்பட்ட கலவைபோல அவர் தன்னைத்தானே நினைத்துக்கொள்வார்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று தன்னைப் பற்றி எழுதியதை அறிந்துக்கொண்ட காம்பீர் ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை அப்ரிதிக்கு தெரிவித்துள்ளார். அதில் "அவருக்கு அவருடைய வயதே என்னவென்று தெரியாதபோது, என்னுடைய சாதனைகள் பற்றி எப்படி தெரிந்து வைத்திருப்பார். சரி, அது இருக்கட்டும். அவருக்கு ஒன்றை நினைவுக்கூற விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவில் 2007 இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நான் 54 பந்துகளில் 75 ரன்கள் அடித்தேன், நீங்கள் முதல் பந்திலேயே டக் அவுட். மிக முக்கியமாக நாங்கள் கோப்பையை கைப்பற்றினோம். ஆம், எனக்கு திமிர்தான் அது பொய் பேசுபவர்கள், ஆதிக்ககம் செலுத்துபவர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளிடம் மட்டுமே" என பதிலடி கொடுத்துள்ளார்.