வாசிம் அக்ரமின் திமிர் பேச்சும் ! எகிறி அடித்த இந்திய அணியும்: ஒரு ப்ளாஷ்பேக் !

வாசிம் அக்ரமின் திமிர் பேச்சும் ! எகிறி அடித்த இந்திய அணியும்: ஒரு ப்ளாஷ்பேக் !
வாசிம் அக்ரமின் திமிர் பேச்சும் ! எகிறி அடித்த இந்திய அணியும்:  ஒரு ப்ளாஷ்பேக் !
Published on

1999 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இப்போதும் போலவே அந்தத் தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்தத் தொடரில் பாகிஸ்தான் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. ஆனால், இந்தியா சூப்பர் 6 சுற்றுடன் வெளியேறியது. இந்தியா பாகிஸ்தானை லீக் சுற்றுகளில் சந்திக்கவில்லை ஆனால் சூப்பர் 6 சுற்றில் சந்தித்தது. இந்தியாவை ஒப்பிடுகையில் லெஜன்ட்ஸ் இருக்கும் அணியாக பாகிஸ்தான் இருந்தது.

அப்போதைய ரசிகர்கள் எப்போது பாகிஸ்தான் - இந்தியா மோதும் என ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தனர். உலகக் கோப்பை சூப்பர் 6 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு அமைந்தது. இந்தியாவுக்கு அசாருதின் கேப்டன், பாகிஸ்தானுக்கு வாசிம் அக்ரம் கேப்டன். ஆம், ஜூன் 8 ஆம் தேதி இங்கிலாந்தின் மான்சஸ்டர் நகரில் இரு அணிகளும் மோத இருந்தன. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். அப்போது டாஸ் போடப்பட்டது. டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது.

அப்போது பேசிய வாசிம் அக்ரம் "இந்தியாவுடனான இன்றையப் போட்டி எங்களுக்கு வெறும் பயிற்சி போட்டிபோலதான்" என எகத்தாளமாக பேசினார். அப்போதே இந்திய ரசிகர்களுக்கு நரம்புகள் புடைத்தது. அன்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 45 ரன்களும், ராகுல் திராவிட் 61 ரன்களும், முகமது அசாருதின் 59 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் எப்படியும் வெற்றிப்பெற்று விடும் என நினைத்தனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் எளிதான இலக்கை நோக்கி ஆடத்தொடங்கியது. ஆனால் அந்த அணியில் அதிகபட்சமாக இன்சமாம் 41 ரன்களும், சயீத் அன்வர் 36 ரன்களை மட்டுமே எடுத்தனர். அந்த அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வியடைந்தது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா அந்தத் தொடரில் சூப்பர் 6 சுற்றுடன் வெளியேறினாலும் பாகிஸ்தான் திமிர் பேச்சுக்கு இந்தியா கொடுத்த பதிலடி ரசிகர்களுக்கு போதுமானதாகவே இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com