“நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2023 ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். மேலும், “உலகக்கோப்பை தான் முக்கியம், ஐபிஎல் தொடர் ஒவ்வொரு வருடமும் வரும். ஆனால் உலகக்கோப்பை 4 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும்” என்றும் கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.
உலகக்கோப்பைகளை பொறுத்தவரை, இந்தியா இதுவரை ஒருநாள் உலகக்கோப்பையை 1983ஆம் ஆண்டு வென்றதற்கு பிறகு 28 வருடங்கள் கழித்து தான் 2011ஆம் ஆண்டில் மீண்டும் கைப்பற்றியது. டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரையில் 2007ஆம் ஆண்டு வென்றதற்கு பிறகு, 15 வருடங்களை கடந்தும் இன்னும் அதை கைப்பற்ற முடியவில்லை.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை வென்றதிற்குபிறகு, ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதிவரை சென்ற இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது. 12 வருடங்கள் கழித்து 2023ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை மீண்டும் இந்தியாவிலேயே நடத்தப்படவிருப்பது, இந்திய அணிக்கும் கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 15 வருடங்களாக, அணியை தேர்வு செய்கையில் சிறந்து ஆடும் 11 வீரர்களை தேர்ந்தெடுப்பதில் இந்திய அணி நிர்வாகம் தடுமாறி வருகிறது என்றே சொல்லவேண்டியுள்ளது. மேலும் உலகக்கோப்பையில் விளையாட செல்வதற்கு முன்னதாக ஆடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி, ஒன்றாக அதிக போட்டிகளில் விளையாடாமலேயே ஐசிசி தொடரில் பங்கேற்று தோல்வியடைந்து வெளியேறும்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல், லீக் போட்டிகளோடு இந்தியா வெளியேறிய போது, தங்களுக்கு ஓய்வில்லாமல் போனது தான் சரியாக விளையாட முடியாமல் போனதற்கு காரணம் என இந்திய அணி வீரர்களாலேயே சொல்லப்பட்டது. அப்போது ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்குபெற்று விளையாடிவிட்டு இந்திய வீரர்கள் உலகக்கோப்பைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னதாக இந்தியா செய்த அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், இந்திய வீரர்கள் நடக்கவிருக்கும் 2023 ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் கவுதம் கம்பீர், “உங்களுடைய ஐபிஎல் அணி பாதிக்கப்படும் என்று நினைத்தால், நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். இந்திய அணியும் பாதிக்கப்படும். இந்திய கிரிக்கெட் தான் முக்கியமானது; ஐபிஎல் அல்ல. இந்தியா உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்தியாவில் நடக்கவிருக்கும் இந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தான் அதற்கு பெரிய சந்தர்ப்பம். அதனால் இந்தியாவின் முக்கிய வீரர்கள் ஐபிஎல்லை தவறவிட்டால், அப்படியே ஆகட்டும்! அதிலொன்றும் பெரிய தவறில்லை. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் நடக்கும். ஆனால் உலகக் கோப்பை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் நடக்கும்” என்று கூறியுள்ளார் அவர்.
மேலும் அவர், “மூன்று விதமான போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஓய்வு எடுக்க விரும்பினால், அவர்கள் டி20 போட்டிகளில் ஓய்வு எடுத்து கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக ஒருநாள் போட்டிகளில் ஓய்வெடுக்க கூடாது. கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில் இந்திய கிரிக்கெட் செய்த மிகப்பெரிய தவறு என்று பார்த்தால், ஆடும் 11 வீரர்கள் ஒரே அணியாக போதுமான கிரிக்கெட் போட்டிகளை ஒன்றாக விளையாடவில்லை என்பது தான். இந்திய அணி சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியாக எப்போது இருந்தது என்று கவனிக்க வேண்டும்.
கடைசியாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பை நேரத்தில் மட்டுமே இந்திய அணி சிறந்த 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பெற முடிவு செய்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது சிறந்து விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியாக இல்லாமல் போனது. அதனால் தான் இந்தியா அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்தியா இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சிறந்த முறையில் தயாராக வேண்டும். வீரர்கள் ஓய்வெடுக்க முடிவு செய்தால் டி20 போட்டிகளில் ஓய்வெடுக்க வேண்டும், ஒருநாள் போட்டிகளில் இல்லை. அவர்கள் ஒன்றாக ஒரே 11 வீரர்கள் கொண்ட அணியாக போதுமான போட்டிகளில் விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.