’ஆடும் லெவனில் இருந்து காம்பீரை நான் நீக்கவில்லை’ என்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
ஐபிஎல் டி20 தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் நேற்றைய லீக் போட்டியில் மோதின. டெல்லி அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டனாக முதல் போட்டி. இந்தப் போட்டியில் முந்தைய கேப்டன் காம்பீர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, காலின் முன்றோ சேர்க்கப்பட்டார். அவரும் பிருத்வி ஷாவும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது.
கவுதம் காம்பீர் நீக்கப்பட்டது பற்றி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்டபோது, ‘காம்பீரை நான் நீக்கவில்லை. அவர்தான் ஆடவில்லை என்று சொன்னார். அதனால்தான் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. அது அவருடைய முடிவுதான். அவரது முடிவை வரவேற்கிறேன். இதற்கு முன் அணியை வழி நடத்திய அவர், சரியாக ஆடவில்லை என்பதற்காக, தானாகவே முன் வந்து விலகிக்கொண்டது தைரியமான முடிவு’ என்றார்.