தியோதர் கோப்பைக்கான தொடரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய பி அணி, 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தியோதர் டிராபிக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. நவம்பர் 4-ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடரில் இந்தியா ஏ, பி, சி என மூன்று அணிகள் மோதுகின்றன. ஏ அணிக்கு ஹனுமா விஹாரி, பி அணிக்கு பார்திவ் பட்டேல், சி அணிக்கு சுப்மான் கில் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஞ்சியில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஏ அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய பி அணி முதலில் பேட்டிங் செய்தது.
ருதுராஜ் கெய்க்வாட் (113), தமிழக வீரர் பாபா அபராஜித் (101) ஆகியோரின் அபார ஆட்டத்தால் பி அணி 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. ஏ அணி தரப்பில் உனட்கட், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டையும் சித்தார்த் கவுல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி 47.2 ஓவரில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில், கேப்டன் விஹாரி அதிகப்பட்சமாக 59 ரன்கள் எடுத்தார்.
பி அணியின் பந்துவீச்சாளர்கள் கலாரியா 3 விக்கெட்டுகளும் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மூன்று பேர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்திய பி அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.