இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'

இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'
இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'
Published on

இந்தியா முழுவதும் ‘பொறியாளர்கள் தினம்’ இன்று கொண்டப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய சில பொறியாளர்கள் யார்? யார்?

இஏஎஸ் பிரசன்னா:

1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் பிஎஸ்.சந்திரசேகர், எஸ்.வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி மற்றும் பிரசன்னா ஆகிய நான்கு பேர் ஆகும். இவர் நெஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் மைசூருவில் பொறியியல் படித்து முடித்துள்ளார். இதுகுறித்து பிரசன்னா, “நான் பொறியியல் படித்ததால் எனக்கு பகுப்பாய்வு திறன் அதிகமாக இருந்தது. இதனால் என்னுடைய விளையாட்டிற்கு அது உதவியது” என ஒருமுறை தெரிவித்துள்ளார்.

எஸ் வெங்கட்ராகவன்:
கிரிக்கெட் உலகில் நடுவராக அதிக பிரபலம் அடைந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எஸ்.வெங்கட்ராகவன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் 1970களில் இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். இவர் இந்தியாவிற்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களை எடுத்திருந்தார். தனது ஓய்விற்கு பிறகு இவர் நடுவராக பணியாற்றினார். இவர் கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்:
1980களில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இவர் தனது அதிரடி ஆட்டத்தால் பல போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். இவர் கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியில் எலக்டிரிகல் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றார். 

அனில் கும்ப்ளே:
இந்திய அணி சார்பில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவர் பெங்களூருவில் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றார். கும்ப்ளே தெரிவிக்கையில் “கிரிக்கெட்டில் எப்போதும் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது. எனவே படிப்பும் எப்போதும் முக்கியமானது. ஏனென்றால் அது உங்களுக்கு உதவி செய்யும்” எனப் படிப்பு முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளார்.

ஜவகல் ஸ்ரீநாத்:

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜவகல் ஸ்ரீநாத். இவர் மைசூருவிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றவர். இவர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் போட்டிகளுக்கு ரெஃப்ரியாக பணியாற்றி வருகிறார். ஸ்ரீநாத், “கிரிக்கெட்டையும் படிப்பையும் ஒன்றாக செய்ய முடியாது என்று நீங்கள் கருதுவீர்கள். ஆனால் அது உண்மையில்லை கும்ப்ளே, ஸ்ரீகாந்த் மற்றும் என்னுடைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். எங்கள் அனைவரின் பொறியியல் மற்றும் கிரிக்கெட் அனுபவத்தை வைத்து பார்க்கும் போது கிரிக்கெட் மற்றும் படிப்பு ஆகியவற்றை ஒன்றாக பார்ப்பது எளிது தான்” எனக் கூறியுள்ளார். 

ரவிசந்திரன் அஸ்வின்:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிசந்திரன் அஸ்வின். இவர் சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழிநுட்ப பிரிவில் பொறியியல் படிப்பை முடித்தார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 342 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்களை எடுத்துள்ளார். தற்போது இவரது ஃபார்ம் சரியாக இல்லாததால் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com