பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் இன்று தொடங்குகிறது. ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோக்கோவிச், முதல் நிலையில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்பெயின் நாயகன் ரபேல் நடால், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியனான கேப்ரின் முகுருசா, முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், இரண்டாம் நிலை வீரரான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காயம் காரணமாக ரோஜர் ஃபெடரரும், கர்ப்பம் காரணமாக செரினா வில்லியம்ஸ்-சும் இதில் ஆடவில்லை. பிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் ஆஸ்திரேலிய நடப்பு சாம்பியன்கள் இருவரும் ஆடாதது இதுவே முதல் முறை.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடும் போட்டி காணப்பட்டாலும் ஸ்பெயினின் ரபெல் நடாலுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் பட்டம் வெல்வார் எனக் கணிக்கப்படுகிறது.
இந்திய தரப்பில் ஒற்றையர் பிரிவில் யாரும் ஆடவில்லை. சானியா மிர்சா, லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா இரட்டையர் பிரிவில் ஆடுகிறார்கள்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.260 கோடியாகும்.