பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் சீக்கிரமே நடையை கட்டிய நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, முதல் முறையாக குரோஷியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதும் எல்லோருடைய கவனமும் அந்த அணியின் பக்கம் தான் இருந்தது.
குரேஷிய அணி உலகக் கோப்பையை வென்று பல வரலாற்றுச் சாதனைகள் படைக்கும் என்று நாடுகளை கடந்து கால்பந்தாட்ட ரசிகர்கள் பலரும் விரும்பினார்கள். ஏனெனில், இந்த உலகக் கோப்பை தொடரில் பல இக்கட்டான தருணங்களில் விடாமுயற்சியால் அந்த அணி வெற்றிக் கனியை ருசித்தது.
இதனால், மாஸ்கோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் குரேஷியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டி தொடங்கியது முதல் ஆட்டம் பிரான்ஸ் அணி தான் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்க, இறுதியில் 4-2 என வெற்றியை வசப்படுத்தியது. குரேஷியா அணியின் தோல்வி அந்நாட்டு ரசிகர்களின் இதயங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குரேஷியா வீரர்களும் தோல்வியால் துவண்டு விட்டார்கள். போட்டி முடிந்த பின்னர் அவர்கள் மைதானத்தில் உற்சாகம் இழந்த நிலையில் காணப்பட்டனர்.
இதனையடுத்து, வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அங்கு ரஷ்ய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவே மாக்ரான், குரேஷியா அதிபர் கொலிந்தா கிராபர் கிடாரோவிக் ஆகியோர் இருந்தார்கள். வீரர்கள் அவர்களிடம் பரிசுகளை பெற்றுச் சென்றார்கள்.
குரேஷியா அதிபர் கிராபர், தோல்வியால் துவண்டு இருந்த தங்கள் நாட்டு வீரர்களை கட்டித்தழுவி உற்சாகப்படுத்திய விதம், அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்டுவிட்டது. ஒவ்வொரு குரேஷியா வீரரையும் அவர் அப்படி உற்சாகப்படுத்தினார்.
தங்கள் வீரர்கள் ஆடுவதை பார்க்க ரஷ்யாவிற்கு தனது சொந்த செலவில் விமானத்தில் அவர் வந்தார். அதோடு, குரேஷியா அணியின் ஜெர்ஸியையும் அவர் அணிந்திருந்தார். மற்ற தலைவர்கள் கோட் அணிந்திருக்க அவர் ஜெர்ஸி அணிந்து அசத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், குரேஷிய அணி வீரர்களையும், நிர்வாகிகளையும் ரஷ்யா நன்றாக கவனித்துக் கொண்டதாக பாராட்டினார். உபசரிப்பு மிகவும் அற்புதமாக இருந்ததாக அவர் புகழ்ந்தார்.