உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் கோப்பையுடன் நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.
ரஷ்யாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குரேஷிய அணியை 4க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வசமாக்கியது. இதனையடுத்து பிராண்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர் அனைவரும் தனி விமானம் மூலம் பிரான்ஸின் Charles De Gaulle விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அங்கு வீரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து திறந்தவேனில் ஊர்வலமாக கால்பந்து வீரர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
அப்போது பிரான்ஸ் விமான படை விமானங்கள், அந்நாட்டு தேசிய கொடி நிறத்தில் வானில் வண்ணத்தைத் தூவி வீரர்களை வரவேற்றனர். மேலும் விமான நிலையம் முதல் வீரர்கள் சென்ற வழியெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று பட்டாசு வெடித்தும், வண்ணப்பொடிகளை தூவியும் சாம்பியன்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது.
இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜார்ஜ் சாம்போலி விலகினார். 58 வயதாகும் ஜார்ஜ் சாம்போலி ஓராண்டுக்கு முன் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுடன் அர்ஜென்டினா அணி வெளியேறிய நிலையில், பதவி விலக அவர் முடிவு செய்தார். சாம்போலியின் பதவி விலகலை அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் உறுதி செய்தது.