இந்தியாவில் மகளிர் டென்னிஸில் புரட்சியை ஏற்படுத்திய சானியா மிர்சா இன்று 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..
ஆட்ட உத்தியால் மட்டுமல்ல, விளையாட்டு ஆடை அலங்காரம் உள்ளிட்டவற்றாலும் காண்போரை கவந்தவர் டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா. இந்திய டென்னிஸ், சானியாவின் சாதனைகளை எளிதில் கடந்து செல்ல முடியாது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நாம் வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்த காலகட்டத்தில் அதனை மெய்ப்பித்துக் காட்டியவர் அவர் .
இரட்டையர் பிரிவில் முதல் இடத்தில் சானியா இருந்த காலகட்டம் இந்திய டென்னிஸின் பொற்காலம். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதுவே சானியாவின் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம். இதன்பின்னர் 2012-ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனிலும், 2014-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபனிலும் சானியா சாம்பியன் பட்டம் வென்றார். 2016-ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறினார் சானியா.
மகளிர் இரட்டையர் பிரிவில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் சானியா. 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும், 2015-ஆம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனிலும் அவர் சாம்பியனாகி இருக்கிறார். ஸ்வட்லானா கஸ்நட்சோவா, ஸோனரேவா, மாரியன் பார்டோலி, மார்ட்டினா ஹிங்கிஸ், டினரா சஃபினா, விக்டோரிய அசரென்கா போன்று அந்தந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த வீராங்கனையெல்லலாம் வீழ்த்தியிருக்கிறார் சானியா.